துள்ளுவதோ இளமை தொடங்கி நெஞ்சம் மறப்பதில்லை வரை, தனித்துவமான திரைப்படங்களை மட்டுமே இயக்கி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் செல்வராகவன். எளிய முறையில் காதல் கதை சொல்வதும், ஆயிரத்தில் ஒருவனில் திரைக்கதையை பிரமாண்டப்படுத்தியும், தமிழ் சினிமாவின் ஜீனியஸாக மாறியுள்ள செல்வராகவன், தனக்குள் இருக்கும் நடிகனையும் சாணி காயிதம், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் வெளிக்காட்டியுள்ளார். புதிய கோணத்தில் கதை சொல்வதன் மூலம் தமிழ் சினிமாவின் ஆயிரத்தில் ஒருவனாக மாறியுள்ள செல்வராகவனின் திரைவாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ளும் முயற்சியே இந்த சிறப்புக் கட்டுரை…
தாம் எதிர்பார்த்த வேலை ஒன்றுக்காக காத்திருக்காமல், கிடைக்கும் வேலையில் முத்திரை பதிப்பவர்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். வாய்ப்புக்காக காத்திருப்பதை விட, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர் என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படி, “சாணி காயிதம்” திரைப்படத்தில், தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன் என்பதுதான், தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் டாக்.
இரண்டாயிரமாவது ஆண்டுக்கு பிறகு “காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி” என இளசுகளை கவரும் படங்களை கொடுத்து, இளைஞர்களின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவராக தடம் பதித்திருந்தார் செல்வராகவன். 15க்கும் குறைவான படங்களே இயக்கி இருந்தாலும், மக்கள் ஆதரவைப் பெற்ற மகத்தான கலைஞன் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது. காரணம், இன்றைய பாகுபலிக்கெல்லாம் முன்னோடியாக 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரத்தில் ஒருவன் என்னும் பிரம்மாண்ட திரைப்படத்தை கொடுத்தவர் செல்வராகவன். அப்போது அவரை பாராட்ட மறுத்த மனங்கள், இப்போது அவர் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றன.
நடிகனாக அவதாரம் எடுத்த செல்வா!!
இந்த சூழலில் தான், நடிப்பதில் ஆர்வம் கொண்ட இயக்குநர்களுக்கு மத்தியில், தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் செல்வராகவன். சில நாட்களுக்கு முன்பு தான், விஜய்யுடன் இணைந்து இவர் நடித்திருந்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. அந்தப்பட்டியலில் சாணி காயிதம் இணைந்திருக்கிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், பீஸ்டில் துணை நடிகராக இருந்த செல்வராகவனுக்கு, சாணி காயிதத்தில் மைய கதாபாத்திரம். கூடவே தேசிய விருதுபெற்ற கீர்த்தி சுரேஷும் நடித்திருக்கிறார்.
ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் கோலோச்சிய செல்வராகவனின் திரைப்பயணம் அவ்வளவு எளிதாக கடந்து போகக் கூடியது அல்ல. சினிமா பின்புலம் கொண்ட வீட்டில் பிறந்தவர் என்றாலும், தன்னை ஒரு இயக்குநராக்குவதற்கு அவரே மேற்கொண்ட பிரயத்தனங்கள் தான் மிகவும் பெரிது. செல்வராகவன் தந்தை கஸ்தூரி ராஜா, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர். ‘என் ராசாவின் மனசிலே, வீர தாளாட்டு’ போன்ற படங்கள் இன்றளவும் அவரை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், கஸ்தூரி ராஜாவின் படங்கள் தொடர்ந்து வெற்றியை ருசிக்கவில்லை. சில படங்கள் தோல்வியையும் தழுவின. இங்குதான் குடும்பத்தின் சூழல் மாறத் தொடங்கியது.
தனயனும் இயக்குநர் ஆக முயற்சி மேற்கொள்வதை அறிந்த தந்தை கஸ்தூரி ராஜா, படிப்பில் கவனம் செலுத்துமாறு கண்டித்தார். தந்தையின் வற்புறுத்தால் பொறியியல் படிப்பில் சேர்ந்தாலும், கல்லூரி முடிந்து வீடு திரும்பியதும், திரைப்படங்களை பார்ப்பதும், புத்தகங்களை படிப்பதுமே செல்வராகவனின் பிரதான வேலையாக இருந்தது. இந்த தருணத்தில் தான், கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்துக்கு திரைக்கதை எழுதி பழகினார் செல்வா. கதை ரெடி, இயக்குநரும் ரெடி, யாரை நடிக்க வைப்பதென யோசித்த கஸ்தூரி ராஜா, தன் இரண்டாவது மகனான தனுஷையே நடிக்க வைத்தார். அந்தப்படத்தின் வெற்றிக்கு பிறகே கதையாசிரியர் செல்வராகவன் என்பது வெளியே தெரிந்தது. அந்த வேகத்தோடு தானே ஒரு படத்தை இயக்க முடிவு செய்தார் செல்வா. அதுதான் “காதல் கொண்டேன்”.
சாமானியர்களுக்கான இயக்குநர்!
2000 ஆண்டில் தமிழ் சினிமா பின்பற்றிக் கொண்டிருந்த அத்தனை கமர்ஷியல் வரையறைகளையும் உடைத்தது காதல் கொண்டேன். நட்பு, காதல், ஏழை, பணக்காரர்கள் வாழ்நிலை, இளவயது தனிமைச்சூழல் இவற்றையெல்லாம் கலந்து, உணர்ச்சிக் குவியலாக இருந்தது காதல் கொண்டேன் திரைப்படம். ஆதரவற்ற இளைஞனின் மனம், ஒரு பெண்ணின் அன்பை அனுபவிக்கத் துவங்கும்போது, அது கைநழுவும் சந்தர்ப்பத்தை எப்படி எதிர்கொள்கிறான் என்ற உளவியலை, மிகவும் நேர்த்தியாகப் பேசியிருந்தது காதல் கொண்டேன். கதாநாயகன் என்றால் உடல் வலுவான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்கிற பிம்பத்தை உடைத்திருந்தார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததில் மகிழ்ச்சியில் திளைத்தார் செல்வராகவன்.
செல்வராகவன் படங்கள் என்றாலே, இயல்பான, சாமானியனின் வாழ்க்கை முறையை பிரதிபளிப்பதுதான் எனும் பேச்சு, செவன் ஜி ரயின்போ காலனி படத்திற்கு பிறகே கிடைத்தது. நண்பர்களுடன் சுற்றித் திரிந்துகொண்டு, வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் அந்த படத்தில் தாங்களே கதாநாயகன் என்று பரவசப்பட்டனர். அப்படித்தான் காட்சிகளை அமைத்திருந்தார் செல்வராகவன். அவர் நினைப்பது நிச்சயம் சரியாக அவருக்கு கிடைத்துவிட வேண்டும் என்பதில் செல்வராகவன் எப்போதுமே பிடிவாதமாய் இருப்பார் என்று படத்தின் நாயகானாக நடித்த ரவி கிருஷ்ணாவே தனது பேட்டி ஒன்றின் போது தெரிவித்திருக்கிறார்.
படத்தில் காதலை காட்டிய செல்வராகவன், தந்தைக்கும் மகனுக்குமான பாசத்தையும் ஆழமாக சொல்லியிருந்தார். மகனை அடித்துவிட்டு, மகனுக்காகவே உருகும் தந்தை குறித்த காட்சி பார்ப்போரை அழவைத்துவிடும். படங்களில் கதாநாயகிகள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்திற்காகவே வைக்கப்படுகின்றனர் என்பது தமிழ் சினிமா சந்திக்கும் மாபெரும் விமர்சனங்களில் ஒன்று. இத்தகைய விமர்சனத்திற்கு செல்வராகவனின் படங்கள் முற்றிலும் முரண்பாடானவை. இந்த பட்டியல் காதல் கொண்டேனில் இருந்து அவர் இயக்கிய அனைத்து படங்களிலும் நீண்டிருக்கும்.
புதுப்பேட்டை; கொக்கி குமார் எனும் டான்
இந்த நிலையில் தான், 2004ல் வெளியான புதுப்பேட்டை திரை ரசிகர்களுக்கு வேறுமாதிரியான அனுபவத்தை கொடுத்தது. ஒரு “டான்” என்றால் வலுவான உடல் கட்டமைப்பு கொண்டிருக்க வேண்டும் என்ற, எழுதப்படாத விதிகளையெல்லாம், ஒல்லியான தேகம் கொண்ட தனுஷை டானாக காட்டியதன் மூலம் உடைத்தெரிந்தார் செல்வராகவன். செல்வராகவன் எதையும் முன்கூட்டியே சிந்திப்பவர். அதனால், அவரது யோசனை மக்களுக்கு புரிய 10 ஆண்டுகள் ஆகிறது போலும், புதுப்பேட்டை திரைப்படத்தை 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையிட்டு மகிழ்ந்தனர் ரசிகர்கள். படங்களில் குறியீடுகளை பயன்படுத்தும் சமகால இயக்குநர்களான மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களுக்கு முன்னோடியாக, தன் படங்களில் குறியீடுகளை பயன்படுத்தினார் செல்வா.
வாழ்வில் அத்தனையையும் இழந்த ஒருவன் உணவுக்காக சிரமப்படுவது, அந்த தருணத்திலும் காதல் தலைநீட்டுவது, பாதிக்கப்பட்ட காதலியை காப்பாற்ற முயல்வது என கொக்கி குமார் கதாப்பாத்திரம் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை கைத்தட்ட வைத்தது. “அறியா பருவத்தில் வருவதுதான் உண்மையான காதல், அதற்கு பின்பு வருவதெல்லாம் காமத்தின் வெளிப்பாடுதான்” என்று பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளித்த செல்வராகவன், தனது படங்களில் காதல் காட்சிகளை மிக எதார்த்தமாக சித்தரித்தார்.
புதுப்பேட்டையில் தனுஷுக்கு உறுதுணையாக இருக்கும் மனைவி கதாபாத்திரமாகட்டும்…., மயக்கம் என்ன படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கணவனால், கர்ப்பிணி மனைவி அனுபவிக்கும் வேதனையாக இருக்கட்டும்… செல்வராகவன் படங்களில் பெண் கதாபாத்திரங்கள் பிரதான இடத்தை பிடிப்பது வழக்கமான ஒன்றாகவே இருக்கும். கணவன் எவ்வளவு பெரிய டான் ஆக இருந்தாலும் வீட்டில் பெண்களுக்குதான் கூடுதல் அதிகாரமும், பொறுப்பும் இருக்கிறது என்பதை அந்த காட்சிகளில் கச்சிதமாக சொல்லியிருப்பார் செல்வராகவன்.
ஆயிரத்தில் ஒருவனாக மாறிய செல்வராகவன்!
தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் அதுவரை ஆயிரத்தின் ஒருவன் என்று எம்ஜிஆர் மட்டுமே கொண்டாடப்பட்ட நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம், இயக்கத்தில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் என்று சொல்லாமல் சொல்லியது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்று சங்கர் கொண்டாடப்பட்டாலும், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் செல்வராகவன் காட்டிய பிரம்மாண்டம் 10 ஆண்டுகள் கழித்தும் அந்த படம் குறித்து பேசுபொருளாக இருக்கிறது. அண்மையில், திரையரங்கங்களில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அனைவரும், இந்த படத்தை ஒப்பிடும்போது பாகுபலி எல்லாம் ஒரு படமே இல்லை என்றுதான் கருத்து தெரிவித்தனர். கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்டோருடன் பார்த்திபன் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2 ஆண்டுகளுக்கும் மேல் உருவான இந்த படத்தில் கார்த்தி சாதாரண மூட்டை தூக்கும் கூலியாக அறிமுகமாகி இருதியில் சோழ இளவரசனை பாதுகாக்கும் ஆயிரத்தில் ஒருவனாக மாறியிருப்பார். உண்மையில் பிரம்மாண்டம் என்பது பல கோடிகளை செலவு செய்து பெரிய செட் அமைப்பது, அலங்காரம் செய்வது கிடையாது. பிரம்மாண்டம் என்பது கதை சொல்லும் விதமே தவிர வேறு ஏதுமில்லை என்று பொட்டில் அடித்தார் போல கூறியிருந்தார் செல்வா.
தனது படங்களில் ஆண் பெண் காதலை சாதுர்யமாக கையாளும் செல்வராகவன், இருவருக்குள்ளும் இருக்கும் ஊடலையும் போகிற போக்கில் கலாய்த்திருப்பார். ஆம், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இரு கதாநாயகிகளுடன் பயணிக்கும் கார்த்தி, இருவரிடமும் தனித்தனியாக சென்று, கட்டினா உங்கள தான் கட்டுனம்னு இருக்கேன் என்று கூறுவதெல்லாம் ரசிகர்களை ஈர்த்தது.
“செல்வராகவனின் படத்தில் நடிப்பது மிகவும் கடினமானது”
படத்தில் தேவையற்ற ஆபாசங்களை தவிர்த்திருக்கலாமே என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்டதற்கு, கதைக்காக மட்டுமே காட்சிகள் அமைக்கப்பட்டது. தேவை இல்லாமல் எந்த இடத்திலும் ஆபாசம் திணிக்கப்படவில்லை என்று பதில் அளித்தார். படத்தின் இறுதி காட்சிகளில் தொடர்ந்து 5 நிமிடம் கண்ணை சிமிட்டவே கூடாது என்று நடிகர் பார்த்திபனிடம் கேட்டு, தனக்கு தேவையான காட்சிகளையும் படமாக்கினார் செல்வா.
இதனை பார்த்திபனே ஒரு மேடை ஒன்றில் மனம் திறந்து கூறினார். தான் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கவில்லை என்றால், எத்தனை முறைவேண்டுமானாலும் ரீ டேக் எடுக்கச் சொல்லி காட்சிகளை எடுப்பவர் செல்வராகவன் என்று நடிகர் பார்த்திபன் நினைவு கூர்ந்தார். இதுவரை பல படங்களில் நடித்துவிட்டாலும், இயக்கிவிட்டாலும், செல்வராகவனின் படத்தில் நடிப்பது மிகவும் கடினமானதாக இருந்தது என்று பார்த்திபன் குறிப்பிட்டார். அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இன்று வரை காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
செல்வராகவனின் உண்மை கதை!
செல்வராகவன் – தனுஷ் கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு “மயக்கம் என்ன” திரைப்படத்தில் இணைந்தது. ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் கதை, எனது வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகளால் தான் உருவானது. நான் சந்தித்த அவமானங்களின் 10 சதவீதமே மயக்க என்ன திரைப்படத்தில் தனுஷின் கதாப்பாத்திரம். பல முறை இயக்குனர்களின் அலுவலகம் தேடி அலைந்திருக்கிறேன். பல நாள் சாப்பிடமால் அலுவலகங்களுக்கு வெளியே காத்திருந்திருக்கிறேன்.
அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன், ஏமாற்றப்பட்டிருக்கிறேன்’ என்று ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார் செல்வராகவன். புகைப்பட கலைஞர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், வெகுஜன மக்களால் கொண்டாடப்பட்டது. ‘வாழ்க்கைல நமக்கு புடிச்ச வேலையை செய்யனு, இல்லனா செத்துடனும் என்று காட்டமான வசனங்கள் எழுதப்பட்டிருந்தன. ஒரு தொழிலை விரும்பி ஒருவர் செய்யும் போது, அதன் மீதான புறக்கணிப்புகள் அந்த கலைஞனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் செல்வா.
இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமக்க, செல்வராகவனும், தனுஷும் பாடலை எழுதினர். பாடல் வரிகளை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள், காட்சிகள் வரும்போது திரையரங்கங்களை அதிரவைத்தனர். ஆனால், இந்த படத்தில் இடம்பெற்ற ‘காதல் என் காதல்’ பாடல் புது சர்ச்சையை கிளப்பியது. பாடல் வரிகள் பெண்களை கொச்சைப்படுத்துவதாக எதிர்ப்புகள் வலுத்தது. செல்வராகவன் வேண்டுமென்றே திட்டமிட்டு வரிகளை எழுதியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இவை அனைத்தையும் முதலில் மறுத்த அவர் பின்னாட்களில் அப்படி வரிகளை எழுதியதற்கு வருந்துகிறேன் என்று பகீரங்கமாகவும் ஒப்புக்கொண்டார். இந்த பாடலில், வேணாண்டா வேணாம் இந்த காதல் மோகம், பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம் என்ற வரிகள் எதிர்ப்புகளை வலுக்க செய்யவே பாடலில் சில வார்த்தைகள் அகற்றப்பட்டன. இதற்கு பிறகாக ஒரு வழியாக சர்ச்சை முடிந்தது.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, போன்ற படங்களுக்கு பிறகு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். இது போன்ற படங்களை மக்கள் ஏற்பார்களா ஏற்க மாட்டார்களா என்கிற சந்தேகத்துடன் தான் படம் எடுத்தீர்களா என்று இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் கேள்வி எழுப்பினார். மக்கள் அங்கீகரிப்பார்களா இல்லையா என்றெல்லாம் பார்க்காமல், புதிது புதிதாக அவர்களுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால், அதே போன்று தொடர்ச்சியாக படங்களை எடுத்து சம்பாதித்துவிடலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை அப்படி செய்பவன் இயக்குனர் அல்ல. மக்களுக்கு புதுமையான படைப்புகளை கொடுப்பதே எனது நோக்கம் என்று பதிலளித்தார் செல்வராகவன்.
ஒரு படத்தில் கையாண்ட காட்சிகளை, அடுத்த படத்தில் தொடராமல் பார்த்துக்கொண்டார். வசனங்கள், காட்சி அமைப்புகள் இவை அனைத்தும் படத்திற்கு படம் மாறுபட்டது. காதல் கொண்டேன் திரைப்படம் துவங்கி 7ஜி ரயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன என தனது படங்களில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தார். தேவையற்ற ஆபாச காட்சிகள், வசனங்களை தவிர்த்தார். என்ன கதை யோசித்தாரோ… அதன்படி படம் அமையவில்லை என்றால் அல்லது நடிகர் ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த படத்தையே கைவிடும் துணிச்சல் கொண்டவராக இருந்தார் செல்வா. இதனாலேயே ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டார்.
கைவிடப்பட்ட திரைப்படங்கள்!
மயக்கம் என்ன திரைப்படத்துக்கு முன்பே நடிகர் கமல்ஹாசனுடன் செல்வராகவன் கை கோர்க்க முடிவு செய்தார். உண்மையில், கமல்ஹாசனின் மாபெரும் படைப்பாக பார்க்கப்படும் தசாவதாரம் திரைப்படத்தை செல்வராகவனே இயக்க இருந்தார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், ஏதோ காரணங்களால் அந்த படத்தை செல்வராகவன் இயக்கவில்லை. இதே போன்று நடிகர் சிம்புவுடன் இணைந்த கான் திரைப்படமும், விக்ரமுடன் சிந்துபாத் திரைப்படம் போன்றவையும் தொடக்கத்திலேயே நின்றுபோனது. இப்படி அடுத்தடுத்து படங்கள் தொடங்கி பாதியிலேயே கைவிடப்பட்டது அவரை சோர்வுக்குள்ளாக்கியது. இதனால் திரைத்துறையில் இருந்து விலகி நிற்க ஆரம்பித்தார். மயக்கம் என்ன படத்துக்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்தே இரண்டாம் உலகம் படத்தை இயக்கினார். ஆர்யா மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் நவீன தொழில்நுட்பத்தில் படம் உருவானது. இந்த படத்திற்கு ஹார்ரிஸ் ஜெயராஜும் அனிருத்தும் இணைந்து இசை அமைத்திருந்தனர். ஆனால் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
சில படங்கள் கை நழுவி போக, புத்தகங்களுடன் நேரத்தை செலவிட தொடங்கினார். இதற்கிடையே தான், செல்வாவின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் மாலை நேரத்து மயக்கம் உருவானது. அதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் செல்வாவே முன்னின்று செய்தார். கதையையும் அவரே எழுதியிருந்தார். ஆனால், செல்வராகவன், அடுத்த படம் எடுக்க 6 ஆண்டுகள் ஆனது. இந்த ஆறு ஆண்டுகளில் எந்த படத்தையும் செல்வராகவன் இயக்கவில்லை. 2019ல் தான் அவர் இயக்கத்தில் சூர்யா நடித்த என் ஜி கே வெளியானது. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் பாடல்கள் அனைத்தும் மக்களை கவர்ந்தன. உண்மையில் செல்வாவின் படத்துக்காக காத்திருந்தவர்களுக்கு ஒரு தீர்வாக இந்தப்படம் இருந்தது.
செல்வராகவன் – நெஞ்சம் மறப்பதில்லை – எஸ்.ஜே. சூர்யா
இதனைத் தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை” படத்தில் கைகோர்த்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘டேய் சும்மா இருடா, என்னால முடியலடா’ என்ற வசனம் இணையத்தை ஆக்கிரமித்தது. 2021ல் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் செல்வராகவனின் அடுத்த விருந்தாகவே ரசிகர்கள் கொண்டாடினர். தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், சாணி காயிதத்தில் முழு படத்தையும் தாங்கி நிற்கும் சங்கையாவாக ரத்தக் கறையுடன் பீடி வலித்து, பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தினார். ‘நானே வருவேன்’ படத்திலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாராட்டு, விமர்சனம் என எது தன் மீது வைக்கப்பட்டாலும் செல்வராகவனுக்கென்று இருக்கும் ரசிகர் பட்டாளம், எப்போதுமே அவரை கொண்டாட காத்திருக்கிறது என்றே கூற வேண்டும். ஆகையால் தான், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம், பாகுபலியின் வருகைக்கு பிறகு, மலைப்புடன் பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்படுவது, சினிமாவுக்காக, அவர் கொடுக்கும் மரியாதையும், கடின உழைப்பும் தான். செல்வராகவன் இல்லை என்றால் நான் இல்லை. என்னை செதுக்கிய கல்கி அவர்தான் என்கிறார் அவரது தம்பியும், அவரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தனுஷ். உண்மையில் தமிழ் சினிமாவில் செல்வராகவனால் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர்களுக்கு செல்வராகவனே எப்போதும் உள்ளார்ந்த வழிகாட்டியாக திகழ்கிறார். “யோசித்து செய்வதல்ல கலை. உள் மனதிலிருந்து வெளிப்படுவதே கலை. எல்லோருக்குள்ளும் அந்த கலை இருக்கிறது. அதற்கு யாரெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்களே கலைஞர்களாகிறார்கள்” என அடித்துக்கூறும் செல்வராகவன் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத கலைஞன் என்றால் இதில் மாற்றுக்கருத்தில்லை…
எழுத்து; யுவராம் பரமசிவம்



















