மஹாராஷ்டிரா அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம் – முதலமைச்சர் அதிரடி

மஹாராஷ்டிரா அமைச்சரவையைச் சேர்ந்த 9 பேர், பிரிந்து சென்றுள்ள நிலையில், அவர்கள் வகித்து வந்த இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சிவ சேனாவைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனி அணியாக செயல்படத் தொடங்கியதில்…

மஹாராஷ்டிரா அமைச்சரவையைச் சேர்ந்த 9 பேர், பிரிந்து சென்றுள்ள நிலையில், அவர்கள் வகித்து வந்த இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிவ சேனாவைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனி அணியாக செயல்படத் தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு வார காலமாக மகாராஷ்ட்ர அரசியல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. சிவ சோனாவைச் சேர்ந்த 8 அமைச்சர்கள், 32 எம்எல்ஏக்கள் தற்போது அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும், சுயேட்சை எம்எல்ஏக்கள் 9 பேரும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே உட்பட குவஹாத்தியில் உள்ள 9 அமைச்சர்கள் வகித்து வந்த இலாகாக்கள், உத்தவ் தாக்கரே ஆதரவு அமைச்சர்களான ஆதித்ய தாக்கரே, அனில் பராப், சுபாஷ் தேசாய் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிறப்பித்துள்ளார்.

அமைச்சர்கள் குவஹாத்தியில் தங்கி இருப்பதால், அவர்கள் வகித்து வந்த இலாகாக்களில் பணிகள் முறையாக நடைபெறும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிர அரசில், 10 கேபினெட் அமைச்சர்களையும், 4 இணை அமைச்சர்களையும் சிவ சேனா பெற்றிருந்தது.

இதனிடையே, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதித்ய தாக்கரே, மும்பையை விட்டு வெளியேறி குவஹாத்தியில் இருப்பவர்கள் தங்களைத் தாங்களே கிளர்ச்சியாளர்கள் என கூறிக் கொள்வதாகவும், உண்மையில் அவர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டுமானால் அவர்கள் இங்குதான் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது முதுகில் குத்திவிட்டு சென்றவர்கள் ஒருநாள் எங்கள் முகத்திற்கு நேராக வரத்தான் வேண்டும் என்றும் அப்போது அவர்களின் கண்களைப் பார்த்து நாங்கள் செய்த தவறு என்ன என்று நிச்சயம் கேட்கப் போவதாகவும் ஆதித்ய தாக்கரே கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.