கட்டுரைகள் செய்திகள்

மறைந்தது பாலிவுட்டின் துருவ நட்சத்திரம்


தினேஷ் உதய்

கட்டுரையாளர்

பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் திலீப்குமார். அவரது மறைவு இந்தியத் திரையுலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்தும் கலையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், நடிகர் திலீப் குமாருக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பு இன்று நேற்றல்ல, பல தலைமுறைகளுக்கு முன்பே உருவானதாகும். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் உடன் திலீப்குமார் இருக்கும் இந்த ஒரு புகைப்படமே அதற்குச் சாட்சி…

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் திரையுலக சூப்பர் ஸ்டாராக வலம்வந்த காலத்தில், இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரமாகக் கோலோச்சியவர் திலீப் குமார். அன்று முதல் இன்று வரை, தமிழ் சினிமாவிற்கும் திலீப்குமாருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திலீப்குமாருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். சென்னையில் கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணனின் சிலை திறக்கப்பட்ட போது, திலீப்குமார் அந்த விழாவில் பங்கேற்க முக்கிய காரணமாக இருந்தார் கருணாநிதி.

இந்தி திரை வானில் 54 ஆண்டுகள் ஜொலித்த திலீப்குமார், 1944-ம் ஆண்டு முதன்முதலாக ஜ்வர் படா” என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகுக்குள் காலடி எடுத்து வைத்தார். இவர் நடிப்பில் அடுத்து வந்த சில படங்கள் தோல்வியைக் கொடுத்தாலும் துவண்டுவிடவில்லை. 1950ம் ஆண்டு திலீப்குமார் ஆண்டாக அமைந்தது. சிவாஜி ராவ் எப்படி ரஜினிகாந்த்தாக மாறினாரோ, அப்படி, முகமது யூசுஃப் கானாக இருந்தவர் திலீப் குமாராக மாறினார். அன்று தொடங்கி 1998 வரை, இந்தி திரையுலகில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து அசைக்க முடியாத ஆளுமையாக வலம் வந்தார் திலீப்குமார்..

தனித்தன்மை வாய்ந்த நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த திலீப்குமார், சிறந்த நடிகருக்கான தேசிய விருது, சினிமா துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். திரைத்துறையில் திலீப்குமாரின் அளப்பரிய சேவையைப் பாராட்டி பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விருதுகளையும் பெற்றிருக்கிறார் திலீப்குமார். மேலும், பாகிஸ்தானின் உயரிய விருதாகக் கருதப்படும் Nishan-e-Imtiaz விருது பெற்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.

இந்தி திரையுலகில் 65 படங்களுக்கு மேல் நடித்துள்ள திலீப்குமார், 1998க்கு பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டார். மாநிலங்களவை உறுப்பினராகக் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2006 வரை மக்கள் பணியாற்றினார். இந்த நிலையில் தான், கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வப்போது, உடல்நலக்குறைவு, சிகிச்சை, ஓய்வு என இருந்தவர், கடந்த மாதம் 30-ம் தேதி மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

திரையுலகில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திலீப்குமார் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, நடிகர்கள் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட்டின் துருவ நட்சத்திரமாகக் கருதப்பட்ட திலீப் குமாரின் மறைவு இந்தியத் திரையுலகுக்குப் பேரிழப்பு.

Advertisement:
SHARE

Related posts

தனியார் வேலை: உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் ஜார்கண்ட்!

Jeba Arul Robinson

அதிமுக – திமுக நேரடியாக எத்தனை இடங்களில் மோதுகின்றன!

Ezhilarasan

2021 -ல் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்பார்: வேல்முருகன்

Niruban Chakkaaravarthi