பா.ஜ.க பிரிவினை ஏற்படுத்த முயற்சி; மதச்சார்பற்ற கட்சிகளுடன் மதிமுக கூட்டணி தொடரும் -துரை வைகோ

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி வளர்ச்சி காண முயற்சி செய்வதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடனான மதிமுகவின் கூட்டணி தொடரும் என துரை வைகோ…

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி வளர்ச்சி காண முயற்சி செய்வதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடனான மதிமுகவின் கூட்டணி தொடரும் என துரை வைகோ கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வைகோவின் மாமனிதன் ஆவணப்பட வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த மதிமுகவின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி வளர முயல்கிறது. ஆளுநர் மக்களுக்காகச் செயல்படவில்லை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களுக்கு இன்னும் ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசின் ஊது குழலாகச் செயல்பட்டு வருகிறார் என்றார்.

மேலும், இது போன்ற காரணங்களால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுடன் மதிமுகவின் கூட்டணி தொடரும். தமிழகத்தில் பாஜகவின் வன்முறை கலாச்சாரம் வேறு ஒன்றி விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரிசி பருப்பு கொள்முதல் செய்ததில் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதை மட்டும் வைத்து குற்றம் நடந்ததாகக் கூறிவிட முடியாது. இது பற்றி விசாரணை முடிந்த பின்னர் தான் பதில் சொல்ல முடியுமெனக் கூறினார்.

அத்துடன், மதிமுக பூரண மதுவிலக்கு கொள்கையிலிருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை. தமிழக முதல்வரின் முயற்சியால் தமிழகத்தில் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன, புயல் மழைக் காலங்களில் பாதிக்கப்பட்ட நான்கு லட்சம் மக்களுக்கு உடனடியாக தங்குமிடம் நிவாரணம் போன்றவை அளித்தது பாராட்டக்கூடியது என்று அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.