மத்தியில் ஆளும் பாஜக மீது திமுக தொடர்ந்து அனலை கக்கி வருகிறது. இந்த சூழல் ஏதோ நேற்று உருவானது அல்ல. திமுக என்ற கட்சி தொடங்கிய நாள் முதலே தேசியவாதத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள் மீது திமுக தனது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வந்துள்ளது. அன்று தேசிய வாதத்தை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சியை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தது. இன்று கால ஓட்டத்தின் மாற்றம் காங்கிரசுடன் இணைந்து தேசியவாதத்தோடு மத அரசியலை கலந்து இந்துத்துவாவை முன்னெடுக்கும் பாஜகவை கடுமையாக எதிர்க்கிறது திமுக. அந்த வரலாறு என்ன ? வாங்க பார்க்கலாம்.
1957இல் சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு களம் கண்டது திமுக. பின்னர், 1967இல் காங்கிரசை வீழ்த்தி ஆட்சி அமைத்த அண்ணா, சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம், பள்ளிகளில் இந்தி மொழியை அகற்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் ஏற்பு, ஒரு ரூபாய்க்குப் படி அரிசித் திட்டம், அரசு அலுவலகங்களில் கடவுள் பட நீக்கம், சுயமரியாதை திருமணச் சட்டம், சென்னையில் ஏழைகளுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், கல்லூரி வரை இலவசக்கல்வி எனப் பல முற்போக்கான சட்டங்களும், திட்டங்களும் நிறைவேற்றினார்.
அண்ணா தொடங்கிய சமூக நலத் திட்டங்களை ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதியும், மூன்றுமுறை முதலமைச்சராக இருந்த எம்ஜி.இராமச்சந்திரனும், ஐந்து முறை முதலமைச்சாரகயிருந்த ஜெயலலிதாவும் மென்மேலும் வலிமைப்படுத்தினர். தமிழ்நாட்டில் 67 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி காட்டியவர் ஜெயலலிதா, அதேபோல் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற கதவை தட்டி தமிழர்களின் உரிமையை வென்று கொடுத்தவர் ஜெயலலிதா. இப்படி அண்ணா விரும்பிய மாநில சுயாட்சிக் கொள்கைகள் இன்று இந்திய அரசியலில் முதன்மையாகக் கருதப்படுவதற்கு திராவிட இயக்க ஆட்சியாளர்கள்தான் காரணம்.
1969ஆண்டிலேயே முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு மத்திய-மாநில உரிமைகளை ஆய்வதற்கு நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, பரிந்துரைகளைப் பெற்று, மத்திய அரசிற்கு அனுப்பியது திராவிட இயக்க ஆட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடாக இன்றும் பார்க்கப்படுகிறது.
1983இல் இந்திராகாந்தி ஆட்சியிலமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா குழு, “அளவுக்கு மீறிய அதிகாரக் குவியல்களால் மத்திய அரசிற்கு இரத்தக் கொதிப்பும் மாநில அரசுகளுக்கு இரத்தசோகையும் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். இதன் விளைவாக திறமையின்மையும், நோயும்தான் இதன் வெளிப்பாடாக உள்ளன. உண்மையில் அதிகாரக் குவியல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீமைகளைப் பெருக்கியுள்ளது” என்று கூறியது.
கடந்த 2003ம் ஆண்டில் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியிலமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடாச்சலய்யா அரசமைப்புச் சட்டத்திருத்தக் குழுவின் பரிந்துரையில், “வலிமையான ஒரு மத்திய அரசும், வலிமையான மாநில அரசுகளும் அமைவதால் பிளவு ஏற்படாது, இரண்டுமே வலிமையாக அமைய வேண்டும், இன்றைக்குக் காணப்படுகிற பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் அதிகாரக் குவியலும், அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமே” எனச் சுட்டிக் காட்டியது.
மத்தியில் அன்று வலுவாக இருந்த காங்கிரசிடம் மாநில சுயாட்சி கொள்கைகளை வென்று பெற்றது திராவிட ஆட்சிகள். மத்தியில் இன்று வலுவாக உள்ள பாஜகவுடன் மாநில சுயாட்சி கொள்கைகளுக்காக திமுக போராடி வருகிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை மாநில சுயாட்சி கொள்கைகளில் அக்கட்சி எவ்வித சமரசமும் செய்து கொள்ளவில்லை. அவரது மறைவிற்கு பிறகு அவைகள் நீரில் கரையும் பெருங்காயம் போல் சிறிது சிறிதாக கரைந்து வருகிறது. அதனால்தான் திராவிட மாடல் ஆட்சியை திமுக கொடுக்கிறது என ஸ்டாலின் சொல்லும்போது, அவை மக்கள் மத்தியில் வெகுவாக எடுபடுகிறது.
திமுக ஆட்சி இன்று முழுமையாக அண்ணா, கருணாநிதி ஆட்சிபோல் வீரியத்துடன் நடந்து கொள்வதாகவே தெரிகிறது. அதேபோல் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்களின் உயர்கல்விக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து சேவை என பல்வேறு தளங்களிலும் திமுக ஸ்கோர் செய்து வருகிறது. இது ஒருபுறம் என்றால் ஸ்டாலின் மிக சாதுர்யாக தனது திட்டங்களை முன் வைக்கிறார். மக்கள் சார்ந்த பிரச்சனைகள் என்றால் உடனை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கிறார். பொதுவான ஒரு கருத்துருவை ஏற்படுத்த முயல்கிறார். திராவிட மாடல் என்பது, இந்துத்துவா மாடலுக்கு எதிரான ஒரு கட்சி என்ற பிம்பத்தை திமுக உருவாக்கி வருகிறது. தாங்கள் இந்துத்துவாவிற்குதான் எதிரானவர்கள். இந்துக்களுக்கு அல்ல என்பதை பறைசாற்றும் விதமாக ஆன்மீக வழிபாட்டுதளங்களுக்கு தேவையான நிதி ஒதுக்குவதிலும் எவ்வித குறையும் வைப்பதில்லை. அதேநேரத்தில் பட்டிண பிரவேசம் போன்ற விவகாரங்களில் திமுகவின் நடவடிக்கை சறுக்கல்களாகவே பார்க்கபடுகிறது.
இதனால் திமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே சமூகவலைதளங்களில் கடும் வார்த்தை போர் நடைபெறுகிறது. குறிப்பாக பிரதமர் மோடி தமிழகத்திற்கான 11 திட்டங்களை தொடங்கி வைக்க சென்னைக்கு வந்திருந்தார். அந்த விழா மேடையிலேயே மத்திய அரசு என கூறாமல், ஒன்றிய அரசு 11 முறை குறிப்பிட்டார் முதமைச்சர் ஸ்டாலின். தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு என்ன ? ஆனால் அவற்றில் சிறிய பங்கே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதியாக வழங்குகிறது என குறிப்பிட்டார். இது தமிழ்நாட்டில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. திராவிடம் அனலை கக்க தொடங்கிவிட்டது என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. அதேபோல் இலங்கையில் நடைபெறும் சூழ்நிலையை பயன்படுத்தி கச்சத்தீவை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு எதிர்வினையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவை தாரை வார்த்த திமுக அதனை திருப்பி கேட்க அருகதையில்லை என காட்டமாக கூறினார். இதற்கு சமூக வலைதளங்களில் பதில் அளித்த திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜூவ் காந்தி,கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக அல்ல. காங்கிரஸ் அரசுதான், அதற்காகவாது நீங்கள் (பாஜக) கச்சத்தீவை மீட்டு இருக்கலாம் அல்லவா ? என எதிர் கேள்வி கேட்டுள்ளார்.
திமுக ஐடி விங்கின் செயலாளர் டிஆர்பி ராஜா தனது டுவிட்டர் பதிவில், ‘கருத்து சொல்லுங்கள்…மாற்று கருத்து சொல்லுங்கள்…இல்ல நாங்க சொல்றது பொய் என்று கூட வாதாடுங்கள்…நாகரீகமாக பதில் வரும். ஆனால் எங்களது தலைவரை பொய்களையும், அவதூறுகளையும் புனைந்து விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்களது மொழியிலேயே திருப்பி அடிப்போம் எனக்கூறி திமுக தொண்டர்களை உசுப்பேற்றி வருகிறார்.
திமுக ஏன் இந்தளவிற்கு இறங்கி சென்றுவிட்டது என விசாரித்தால், பாஜகவினர் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், பிரஸ் மீட்களிலும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். அவர்களுக்கு பதில் கூற சில நேரங்களில் கசப்பு மருந்து கொடுக்க வேண்டியுள்ளது என்கின்றனர். பாஜகவும் இவர்களுக்கு சளைத்தவர்களாக இல்லை. அவர்களும் திராவிடம் கக்கும் அனலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள்.
இராமானுஜம்.கி










