மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா வாஜ்பாயின் 101-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று டெல்லியில் உள்ள ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நாட்டு மக்களின் இதயங்களில் ஆழமாக இடம்பிடித்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு அவரது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசக் கட்டுமானத்திற்காக அர்ப்பணித்தார்.
அவர் ஒரு சக்திவாய்ந்த பேச்சாளராகவும், துடிப்பான கவிஞராகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது ஆளுமை, படைப்புகள் மற்றும் தலைமைத்துவம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளியாகத் தொடர்ந்து செயல்படும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







