நெருக்கடியான நேரத்தில் உதவி வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தான் பேசியதாகவும், நெருக்கடியான இந்த தருணத்தில் இந்தியா உதவி வருவதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான க்வாட் அமைப்பின் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24ம் தேதி நடைபெற்றது. அப்போது, க்வாட் நாடுகளிடம் இலங்கை பொருளாதார உதவியை கோரியது.
இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் கிஷிடாவும் தனியே பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, இரு நாடுகளும் இணைந்து இலங்கைக்கு உதவ முடிவெடுக்கப்பட்டதாக ஜப்பான் அறிவித்தது.
இதற்கு நன்றி தெரிவித்து மற்றொரு ட்வீட் செய்துள்ள ரணில், இலங்கையின் கோரிக்கையை ஏற்று உதவ முன்வந்திருப்பதற்கு இந்தியா மற்றும் ஜப்பானுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, இலங்கைக்கான இந்திய தூதர் மிலிண்டா மொரகோடா நேற்று சந்தித்தார். இதையடுத்து இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைக்கு கூடுதல் பொருளாதார உதவிகளை அளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக தெரிவித்தது.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள ரணில், புதிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும், எதிர்காலத்திற்கான பொருளாதார திட்டமிடலை மேற்கொள்ளவும் இலங்கையின் தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.
சர்வதேச கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்து வருவது குறித்தும், சர்வதேச அளவில் உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருவது குறித்தும் நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.








