பாஜக, ஆர்.எஸ்.எஸ் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள்- ராகுல்காந்தி

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். ஆனால் காங்கிரஸ் அன்பை பரப்புவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும்,காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை நடைபயணம்’ மேற்கொண்டு வருகிறார்.…

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். ஆனால் காங்கிரஸ் அன்பை பரப்புவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும்,காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை நடைபயணம்’ மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் காஷ்மீரில் சென்று முடிவடைய உள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை கடந்து நேற்று ஹரியானாவில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். இதில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டார்.

100 நாட்களை கடந்துள்ள இந்திய ஒற்றுமை பயணம் இன்று தேசிய தலைநகரான டெல்லியில் நுழைந்துள்ளது. ஒற்றுமை நடைபயணமாக டெல்லி சென்றடைந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றைய நடைபயணத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இன்றையை நடைபயணம் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நாட்டில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள். நாங்கள் அன்பை பரப்புகிறோம். பாஜக வெறுப்புணர்வை பரப்பும் பஜாரில் நாங்கள் அன்புக்கடையை திறக்கிறோம். இந்த யாத்திரையில் இந்துஸ்தானும் அன்பும் நிறைந்து இருக்கிறது.

ஜாதி, மதம், பணக்காரன், ஏழை என்று எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைவரையும் அரவணைத்து செல்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் அனைத்து கொள்கைகளும் அச்சத்தை விதைப்பது தான். அனைவரும் அச்சத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். இந்த அச்ச உணர்வை வெறுப்பாக மாற்றுகிறார்கள். ஆனால், நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம். நாங்கள் அன்பை பரப்புகிறோம். அனைத்து இந்தியர்களையும் அரவணைத்து செல்கிறோம்.

3 ஆயிரம் கி.மீட்டருக்கு மேல் நடந்து இருந்தாலும் நான் களைப்பு அடையவில்லை. இதற்கு நீங்கள் கொடுத்த அன்பும் புத்துணர்ச்சியுமே காரணம். அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியா எங்களுக்கு உதவியிருக்கிறது. அதை ஒருபோதும் மறக்க மாட்டோம்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.