கொள்கைகளை மாற்றினால் பாஜகவுடன் கூட்டணி- திருமாவளவன் அதிரடி

கொள்கைகளை மாற்றினால் பாஜகவுடன் கைகோர்ப்பதில் விசிக தயங்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடைபெற்ற 25வது கிறிஸ்துமஸ் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்…

கொள்கைகளை மாற்றினால் பாஜகவுடன் கைகோர்ப்பதில் விசிக தயங்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடைபெற்ற 25வது
கிறிஸ்துமஸ் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டார். கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், நாம் பேரணி, மாநாடு நடத்தினால் வன்முறை வெடிக்கும் என வதந்திகளை பரப்புகிறார்கள். வேண்டுமென்றே இந்த நிகழ்ச்சியை தடுக்கவேண்டுமென்று சதி முயற்சிகளில் ஈடுபட்டார்கள். இது அற்பர்களின் அற்ப முயற்சி. இந்துமதத்தில் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகளை சார்த்தவர்கள் சமூக
நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆர்எஸ்எஸ், பாஜக தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மதங்களுக்கிடையிலான
வெறுப்பை வளர்கிறார்கள். வெறுப்பு அரசியலை வளர்க்கும் சங்கு பரிவார்
அமைப்புகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்களை விமர்சிக்கும் போது இந்துக்களை
எதிர்ப்பதாக வதந்திகளை பரப்புகிறார்கள். சாதாரண இந்துக்களை எதிர்பதில்லை. எங்கள் வீட்டில் உள்ளவர்களும் இந்துக்கள் தான். கட்சியில் இருப்பதில் 80 விழுக்காடு இந்துக்கள் தான்.

ஆர்எஸ்எஸ்ஸின் சங்பரிவார் அமைப்புகளில் ஒன்று தான் பாஜக. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் ஆதாயத்திற்காக கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்துக்களை அணிதிரட்டும் முயற்சி நடக்கிறது. கொள்கைகளை மாற்றினால் விசிக கட்சி பாஜகவுடன் சங்பரிவார் அமைப்புகளோடும் கைகோர்பதில் ஒருபோதும் தயங்காது என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன், விஜய்வசந்த் எம்பி, ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சைமுத்து, எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.