சென்னையில் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மகளிர் அணி உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை அவதூறாக பேசிய திமுகவினரை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் 300க்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அண்ணாமலை, “திராவிட முன்னேற்றக் கழகத்தினர், பெண்களை தவறாக பேசி வருகின்றனர். திராவிட மாடல் அரசு பெண்களை தவறாக பேசுபவர்களை கண்டிக்காது. ஆனால் பெண்களை தவறாக பேசியதற்கு ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்ய காவல்துறையை அனுப்பும்.
மிகவும் ஆபாசமாக பாரதிய ஜனதா கட்சி மகளிர்களை ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதை அமைச்சர் ஒருவர் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் சாதிக் பாஷாவை கைது செய்திருக்க வேண்டும். அமைதியான முறையில் கொட்டுகின்ற மழையில், மகளிர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின்மீது மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. சாதிக் பாஷா, அமைச்சர் மனோ தங்கராஜின் தூண்டுதலால் நான்கு பாஜக மகளிரை தவறாக பேசியுள்ளார். எப்பொழுது ஒரு ஆட்சி பெண்களின் நம்பிக்கையை இழக்கிறதோ, அப்பொழுது அந்த ஆட்சி உயிரற்றப் போனதற்குச் சமமானது.
பாஜக எப்பொழுதும் சட்டத்திற்கு ஒத்து போகின்ற ஒரு கட்சி. காவல்துறை எங்களிடம் காட்டுகின்ற வீரியத்தை, தவறு செய்த மனிதன்மீது காட்ட வேண்டும். முதலமைச்சர், உடனடியாக அந்த மனிதர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் கட்சியில் ஆபாசமாக பேசும் அனைத்து மனிதர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்று பேசும் மனிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்களால் சொல்ல முடியுமா? மழையை பொருட்படுத்தாமல் மகளிர் மட்டும் இங்கே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள். எதற்கும் கவலைப்படாதீர்கள். எதற்கும் அஞ்சாதீர்கள். காவல்துறை கைது செய்வார்கள் என்று எந்த பெண்ணும் அஞ்சக்கூடாது.
தவறாக பேசியவன், தவறு செய்தவன் வெட்கப்படவில்லை. தட்டி கேட்கும் நாம் எதற்கு வெட்கப்பட வேண்டும். சட்டம் என்பது சமமாக, நியாயமாக, நேர்மையாக இருக்க வேண்டும். கண்டிப்பாக இந்த மழையில் அனைத்து மகளிர் அணியும் நீந்தி வந்திருப்பீர்கள். நடந்து வருவதற்கு வாய்ப்பு இல்லை. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும்பொழுது இது போன்று பேசுபவனுக்கு நாக்கு இருக்காது. கை வைப்பனுக்கு கை இருக்காது” என்று பேசினார்.
தொடர்ந்து அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்திய காரணத்துக்காக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சில மணி நேரங்களுக்குப் பின்னர் கைதான அண்ணாமலை, பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.









