குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்து 140 பேர் உயிரிழந்த இடத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தில், கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதையடுத்து, கடந்த 26-ம் தேதி மக்களின் பயன்பாட்டுக்கு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்தநிலையில்தான், பாலத்தில் இருந்து மக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த நிலையில், எதிர்பாராத விதமாக பாலம் அறுந்து விழுந்தது. இந்த விபத்தையடுத்து, பாலத்தை புதுப்புக்கும் பணிகளை மேற்கொண்ட கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை பிரதமர் மோடி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தனி ஹெலிகாப்டர் மூலம் குஜராத் வந்து இறங்கிய அவர், கார் மூலம் மோர்பி பகுதிக்கு சென்றார். பின்னர் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலுடன் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இதையடுத்து, மோர்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நாளை குஜராத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் தெரிவித்துள்ளார். தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசு விழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாயும், பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்








