முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாஜக அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்றிரவு, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடினர். இந்த பெட்ரோல் குண்டு வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தின் பதற்றம் அடங்குவதற்குள், துணிக்கடை ஒன்றில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், கோவையில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீடுகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இதனிடையே, பொள்ளாச்சி அடுத்த குமரன் நகரில் உள்ள பாஜக நிர்வாகிகளான கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் சரவணன் ஆகியோர் வீடுகளின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடியுள்ளனர். மேலும் கார்கள், இரண்டு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் மதன்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தில் சச்சின் ஆகியோருக்கு சொந்தமான ப்ளைவுட் கடைகளிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில், ப்ளைவுட்கள் பாதி எரிந்த நிலையில் கிடந்ததை பார்த்த கடையின் உரிமையாளர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.


கோவையில் பாஜக நிர்வாகிகள், கடைகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், ஈரோட்டிலும் பாஜக நிர்வாகியின் கடை மீதும் பெட்ரோல் நிரப்பிய பாக்கெட் வீசப்பட்டுள்ளன. பாஜகவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, மூலப்பாளையத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் பொறுப்பு வகிக்கும் நிலையில், அவரது கடையிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாக்கெட்டுகளை வீசிச்சென்றுள்ளனர்.

அது எரியாத நிலையில் அப்படியே கிடந்ததை பார்த்த தட்சிணாமூர்த்தி, போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எரியாமல் கிடந்த பெட்ரோல் பாக்கெட்டுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர் தியாகு கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், கார் சேதமடைந்தது. நேற்று இரவு முதல் பாஜக அலுவலகங்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

Gayathri Venkatesan

தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்னைகள்-மாவட்ட ஆட்சியரிடம் பட்டியலை அளித்த முதல் எம்எல்ஏ!

Web Editor

திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை: இபிஎஸ்

EZHILARASAN D