ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசு கிடையாது. என்னை அடித்தால் திருப்பி அடிப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சுதந்திரபோராட்ட வீரர் பூலிதேவனின் பிறந்த நாளையொட்டி பாஜக அலுவலகத்தில் அவரின் திருவுருவ சிலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மலர்தூவிமரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித் அவர், விநாயகர்சதுர்த்தி விழாவிற்கு முதன்முதலாக விடுமுறை அளித்தது திமுக அரசு தான். பேரறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சராக இருந்த போது தான் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அண்ணா வகுத்து கொடுத்த பாதையிலிருந்து இன்று திமுக விலகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக எம்பி ஒருவர் இந்து அறநிலையத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு கேள்வி எழுப்பியுள்ளார். இந்து அறநிலையத்துறை வாழ்த்து கூறியது எந்த விததத்திலும் தவறு கிடையாது.
பாஜக எப்போதும் கிறிஸ்தவம், இஸ்லாமியம், இந்து என்று பிரித்து பார்ப்பது கிடையாது. பாஜக சார்பில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர். பாஜக அனைத்து மதத்தினருக்கும் வாழ்த்து சொல்வதன் மூலமாக சமுதாயத்தின் ஒற்றுமையை மேலோங்க செய்கின்றோம்.
அண்ணா வழியில் வரக்கூடிய இந்த ஆட்சி தற்போது வழி தவறியிருக்கின்றது. தமிழக முதலமைச்சராக இருந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதிலிருந்து தவறியிருக்கிறார். முதலமைச்சராக தமிழக மக்கள் எதிர்பார்ப்புளை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கமாட்டேன் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கிறது என்பது எங்கள் கருத்து.
தமிழகத்தில் முதலமைச்சர் தான் மத அரசியல் செய்கிறார். அதைவிட்டு விட்டு பாஜக தான் மத அரசியல் செய்கிறது என்பது முற்றிலும் தவறானது. ஆனால் முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காதது அவர் தான் மத அரசியல் செய்கிறார் என்பது மறுபடியும் ஊர்ஜிதமாகிறது. பாஜக தான் மத அரசியல் செய்கிறது என்று முதலமைச்சர் சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
அரசியலை பொறுத்தவரை தமிழகத்தில் கருத்தியல் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். கருத்தை கருத்தாக தான் எதிர்கொள்ள வேண்டும். நிதியமைச்சர் தனது ட்விட்டரில் மதுரை சம்பவத்தில் அவர் வாகனத்தின் மீது செருப்பு வீசுவதற்கு அண்ணாமலை தான் காரணம் என தெரிவித்திருக்கிறார்.
அதற்கு நான் ட்விட்டரில் அளித்த பதிலில் எந்த தவறும் இல்லை. செருப்புக்கு கூட நீங்கள் தகுதியாக இல்லை என்றேன். மிஸ்டர் பிடிஆர் என்று மரியாதையாக கூறியிருந்தேன். உங்கள் இன்ஷியலை எடுத்தால் நீங்கள் யார் என்று கேட்டேன். சமூக நீதிகட்சிக்கும், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் இருந்த தொடர்பு அனைவருக்கும் தெரியும். நான் கேட்டதில் எந்த தவறும் இல்லை.
திமுக அதன் அரசியல் பாணியிலிருந்து வெளியே வரவேண்டும். மிரட்டலாம், உருட்டலாம் என்று நினைத்தால் அது நடக்காது. நாளைக்கு என்னால் வெறும் துண்டு போட்டு தூங்க முடியும். பிடிஆரால் முடியுமா? முதலமைச்சரால் முடியுமா? கிராமத்தில் விவசாயம் செய்து என்னால் பிழைக்க முடியும். முதலமைச்சரால் முடியுமா? என்று சவால் விடுத்தார்.
அரசியலுக்கு வரும் முதல் பட்டதாரி இளைஞர்களுக்கு சமூக நீதி பேசும் திமுக எத்தனை பேருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. அப்படி யாராவது அரசியலுக்கு வந்தால் ஆபசாமாக பேசுவது, ஐ.டிவிங் மூலம் மிரட்டுவது, அவதூறு பேசுவது திமுகவின் வழக்கமான பாணி. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் இயேசு கிடையாது. அதற்கான தக்க பதிலடி கொடுப்பேன். மரியாதையான அரசியலை திமுக செய்தால் நானும் இரட்டிப்பு மரியாதையை வழங்குவேன். பிடிஆருக்கு பதிலடி கொடுத்ததில் எந்த தவறும் கிடையாது என்று அவர் கூறினார்.