விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி – முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தொகையான ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில்…

புதுச்சேரியில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தொகையான ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில் முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்துப் பேசினார். அப்போது புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்றும், அதற்கான இடத்தேர்வு இன்னும் இறுதியாகவில்லை எனவும் பேசினார். இடத்தேர்வுக்குப் பிறகு விரைவில் புதிய சட்டமன்றம் கட்டும் பணி துவங்கும் எனக் கூறினார்.

அதோடு 2022 ம் ஆண்டு விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தொகை 13.8 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் அறிவித்தார். கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தனியார் பங்களிப்புடன் அரசு விரைவில் துவங்கும் எனவும், நலிவடைந்த கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த 30 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அறிவித்தார்.
மேலும் புதுச்சேரி அரசின் பாண்டெக்ஸ் மற்றும் பாண்பேப் நிறுவனங்கள் மூலம் மீண்டும் விழாக் காலங்களில் அரசின் இலவச துணி வகைகள் வழங்கப்படும் எனப் பேசிய அவர், இதன் மூலம் துணி வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கான சீருடைகளை அரசு நிறுவனம் மூலம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

மூடப்பட்டுள்ள அரசின் 3 மில்களை திறந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை கொடுக்கும் வகையில் அவை செயல்படுத்தப்படும் என்றார். மேலும் முதுகலை பட்டப்படிப்பிற்கு அரசு கலந்தாய்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு, அரசு நிதி வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார். மேலும் 70 முதல் 80 வயதுள்ள முதியோருக்கு உதவித்தொகை 2500 ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். துப்புரவுப் பணியாளர்கள் இனிமேல் தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் எனப் புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.