பெகாசஸ் மூலமாக அரசியல் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டது என்ற புகார் பொய்யானது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரை ஆத்திக்குளம் பகுதியில், பாஜக பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசனின் தந்தை மறைவிற்கு நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:
மாநிலங்களில் உள்ள பாஜக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறேன். நிச்சயமாக அனைத்து பகுதிகளுக்கும் செல்வேன். ஊரடங்கு தளர்வு வந்தால் உள்ளரங்கு கூட்டங்கள் நடத்தவுள்ளோம். சிந்தாந்த அடிப்படையிலான கட்சி்தான் பாஜக. திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிகாட்டுவோம், அப்போது மக்கள் எங்கள் பக்கம் வருவார்கள்.
பிரதமர் மோடியின் நலத்திட்டங்ளால் தமிழகத்தில் மூன்றரை கோடி பேர் பலன் பெற்றுள்ளனர். இதன் காரணமாக பாஜகவிற்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பெகாசஸ் மூலமாக அரசியல் தலைவர்கள், ஒட்டுகேட்பு என்ற புகார் மீது மத்திய அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். வாட்ஸ் அப் நிறுவனம் பெகாசஸ் மூலமாக, கிராக் பண்ண முடியாது என உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
தனிமனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் பாஜக யாருடைய பேச்சையும் ஒட்டு கேட்காது. ஒட்டு கேட்கும் விவகாரம் யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டு. பெகாசஸ் ஸ்பைவேரிடம் நம்பர் இருப்பதால் ஒட்டு கேட்கப்பட்டது என்பது உண்மையல்ல. அரசியல் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட ஊடகம் வெளியிட்ட செய்திதான் ஒட்டு கேட்பு விவகாரம். தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் கட்சி பாஜக. ஒட்டுகேட்பு புகார் என்பது பொய் செய்தி.
பாஜக கூட்டாக பணி செய்துவருகிறோம். வேல்யாத்திரை மக்களின் வேள்விக்காக நடைபெற்றது. மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் பாஜகவின் யாத்திரைகள். திமுகவிற்கு பாஜகதான் எதிரி என்ற அடிப்படையில் தமிழக அரசியல் களம் நகர்கின்றது. நாங்கள் திராவிட சிந்தாந்தம் பற்றி பேச விரும்பவில்லை.
இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.








