தேசத்து மக்கள் மிகப்பெரிய சவாலை சந்திப்பதை போல பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் , புதுச்சேரி மக்களும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கல் தொடர்பான ‘வெளிச்சத்தில் இருந்து
இருளுக்கு” என்ற ஆவணப்பட வெளியீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ஜி. ராமகிருஷ்ணன் பேசுகையில்.. அவர் கூறியதாவது
”புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனியாருக்கு விற்பதற்கு முடிவெடுத்தபோது பெரும் போராட்டம் வெடித்தது. பொறியாளர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தேசத்து மக்கள் மிகப்பெரிய சவாலை
சந்திப்பது மட்டுமல்ல, புதுச்சேரி மக்களும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடிய சூழலில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.மத்தியிலும் பாஜக ஆட்சி. புதுச்சேரி மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்தியாவிலேயே ரேஷன் கடைகளை மூடி, திறக்க முடியாது என்று சொல்லக்கூடிய
மாநிலமாக புதுச்சேரி திகழ்ந்துகொண்டிருக்கிறது. அடுத்து மின்துறையை
தனியாருக்கு விற்க முடிவெடுத்தது. மக்களின் போராட்டத்துக்கு பிறகும் கூட வருகின்ற
9-ம் தேதி டெண்டரை திறக்க இருக்கிறது இந்த அரசு. புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்பட்டால், புதுச்சேரி பிரதேசத்தின் தொழில் வளர்ச்சி பாதிப்பதோடு மட்டுமின்றி, ஏழை எளிய மக்களின் அன்றாட மின் இணைப்பு போன்றவை கடுமையாக பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும். மின்துறையை தனியார் மயமாக்குவோம் என்ற அரசின் முடிவை எதிர்த்து மக்களிடம் கொண்டு செல்லவே இந்த ஆவணப்படத்தை வெளியிடுகிறோம்.
புதுச்சேரி மாநிலத்தை பாஜக பரிசோதனை கூடமாக பயன்படுத்துகிறார்கள்.
மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தை அட்சயபாத்ரா என்ற தனியாருக்கு
அளித்தார்கள். இப்போது மின்துறையை தனியார் மயமாக்க முடிவெடுத்துள்ளனர்.
எனவே மின்துறையை பாதுகாப்போம், தனியாருக்கு அனுமதிக்கமாட்டோம் என
எதிர்கட்சிகள் இணைந்து, ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி மகத்தான போராட்டத்தை
நடத்தி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜகவின் இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும்”
என்றார்.







