“தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி” -அண்ணாமலை

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் பணிகள் கடந்த இரண்டு மூன்று தினங்களாக சென்னை…

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் பணிகள் கடந்த இரண்டு மூன்று தினங்களாக சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்று வந்தது.  அதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 இடங்களும்,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி,  ஜான் பாண்டியன் மற்றும் இளங்கோயாதவ் ஆகியோரின் கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  ஆனால் ஓபிஎஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஒப்பந்தம் நேற்று இறுதிச் செய்யப்படவில்லை.  இந்த நிலையில் இன்று மேலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தமிழ் மாநில காங்கிரசுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,  “தமிழ் மாநில காங்கிரசுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  ஓபிஎஸ் உடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.  கூட்டணிக் கட்சிகள் உடனான ஒப்பந்தம் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் பாஜக 20 இடங்களிலும்,  கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் நான்கு இடங்களிலும் மொத்தம் 24 இடங்களில் தாமரை சின்னம் போட்டியிடுகிறது.

பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலைக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்.  39 தொகுதிகளிலும் போட்டியிடும் பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை தமிழக மக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்து  வெற்றிபெற வைப்பார்கள் என்று நம்புகிறோம்”

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.