2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சரியான போட்டியே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், திரிபுராவின் நிலைமையை மாற்ற ‘Chalo Paltai’ (‘சலோ பல்தாய்’) முழக்கம் முன்னெடுக்கப்பட்டது. இன்று அதைச் செய்துள்ளோம். இதற்கு முன்பு மாநிலத்தில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்த போது, அரசு ஊழியர்களுக்கு 5-வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் வழங்கப்பட்டது.
ஆனால் நாங்கள் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்காமல் 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தினோம். பாஜக ஆட்சியில் திரிபுராவில் வன்முறையை ஒழித்தோம். மேலும் மாநிலத்தில் எல்லை தாண்டிய போதைப்பொருள் வணிகத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதையும் படிக்கவும்: அதானி விவகாரத்தில் பாஜக பயப்படவோ, மறைக்கவோ எதுவும் இல்லை- அமித்ஷா
திரிபுராவில் பாஜகவின் தொகுதிகளையும், வாக்கு சதவீதத்தையும் அதிகரிப்போம். பாஜகவை தோற்கடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டதால் தான் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை அன்று மதியம் 12 மணிக்குள் திரிபுராவில் பாஜக பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு சவாலான போட்டி இல்லை என்று நம்புகிறேன். பிரதமர் மோடியுடன் சேர்ந்து நாடு முழு மனதுடன் முன்னேறி வருகிறது. மக்கள் தற்போது குடும்ப கட்சிகளின் ஆட்சியில் இருந்து மாறி பாஜகவின் வளர்ச்சி அரசியலை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கடந்த 2 மாதங்களில், நான் 5 முறை கர்நாடகாவிற்கு சென்றுள்ளேன். அந்த மாநில மக்கள் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே கர்நாடகாவில் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். ராஜஸ்தான், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு எதிராக ஆயிரம் சதிகள் செய்தாலும், உண்மை தான் வெல்லும். 2002ம் ஆண்டில் இருந்து மோடிக்கு எதிராக சதி நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி வலிமையாகவும், பிரபலமாகவும் வெளிவருகிறார். பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.
1950-ம் ஆண்டு முதல், ஜம்மு காஷ்மீரில் இருந்து 370 சட்டத்தை நீக்குவது பாஜகவின் நோக்கமாக இருந்தது. இப்போது ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருவதோடு, தீவிரவாதிகளும், தீவிரவாதத் தாக்குதல்களும் குறைந்து வருவது நிரூபணமாகி வருகிறது என்று அமித்ஷா கூறினார்.







