ஆப்பிள் ஏர்டேக் தொழில்நுட்ப உதவியுடன், அமெரிக்க தம்பதி தங்களது திருடப்பட்ட காரை சில மணி நேரங்களில் மீட்டெடுத்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுக்குரிய செய்தியாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஆப்பிள் எப்போதுமே புதுமையான மற்றும் தனித்துவமான தயாரிப்புகளை தயாரித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது. அதில் குறிப்பாக ஆப்பிளின் புதிய தயாரிப்பான ஏர்டேக்குகள் சமீப காலங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த AirTag சாதனத்தின் உதவியுடன் ஆப்பிள் பயனர்கள் அவர்களது ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச்கள், தொலைந்த சாதனங்கள், அவர்களின் லக்கேஜ்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களை துல்லியமாக கண்டறிந்து மீட்டெடுக்க முடிந்திருக்கிறது.
இது போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும், சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி தங்களது AirTag மூலம் திருடப்பட்ட காரை சிலமணி நேரங்களிலேயே மீட்டெடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வடகரோலினாவைச் சேர்ந்த தம்பதியான லெஸ்லி மற்றும் அந்தர் முஹம்மது. இவர்கள் டொயோட்டா கேம்ரி என்ற காரை தங்களது சொந்த பயன்பாட்டிற்காக உபயோகித்து வந்தனர். சம்பவத்தன்று இரவு இத்தம்பதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது திடீரென அப்பகுதிக்கு வந்த கார் திருடர்கள், முதலில் இவர்களது பக்கத்து வீட்டில் உள்ள
காரை திருடத்தான் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களது துரதிஷ்டம் அது முடியாத நிலையில், இவர்களது டொயோட்டா கேம்ரி காரை திருடி சென்றுள்ளனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி
இருந்த நிலையில், சில மணி நேரங்களுக்கு பின்னரே தங்களது கார் திருடப்பட்ட சம்பவம் லெஸ்லி மற்றும் அந்தர் தம்பதியினருக்கு தெரிய வந்துள்ளது. உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, காரில் ஆப்பிளின் கண்காணிப்பு சாதனமான ஆப்பிள் ஏர்டேக் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருந்ததால் காரின் இருப்பிடத்தை எளிதில் அடையாளம் காண முடிந்தது. வீட்டிலிருந்த சுமார் 12
மைல் தொலைவில் உள்ள பார்க்கிங் இடத்தில் கண்டறிந்த அவர்கள் இரண்டரை மணி நேரத்திற்குள்ளாகவே தங்களது காரையும் கண்டடைந்தனர்.
மேலும் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு
பேர் போலீசாரால் கைது செய்ய பட்டனர். இது போன்று AirTag உதவியுடன் பொருட்கள் மீட்டெடுக்கும் சம்பவம் இது முதல் முறையல்ல. முன்னதாக, டொராண்டோவைச் சேர்ந்த ஒருவர் தனது ஏர்டேக்ஸை பயன்படுத்தி, திருடப்பட்ட அவரது எஸ்யூவி வாகனத்தை கண்டுபிடித்துள்ளார்.
அதே போல் சில நாட்களுக்கு முன்பு புகாரளிக்கப்பட்ட மற்றொரு வழக்கில், கனடாவைச் சேர்ந்த தம்பதிகள் விமான நிலையத்தில் தாங்கள் தொலைத்த லக்கேஜ்களை AirTag உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் இன்று Apple AirTag டெக்னாலஜி
உலகின் புதிய வர பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.
- பி. ஜேம்ஸ் லிசா











