சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை கன்னட திரையுலக நட்சத்திரங்களான நடிகர் யாஷ், காந்தாரா படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, மறைந்த கன்னட லிட்டில் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
பெங்களூருவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை எலகங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. நேற்று தொடங்கிய கண்காட்சி 17-ந் தேதி வரை நடைபெறுகிறது. 5 நாட்கள் வரை நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி நிகழ்வான ஏரோ இந்தியா கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு வருகை தந்தார்.
அவரை பெங்களூரு விமான நிலையத்தில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் விழா நடைபெறும் எலகங்கா விமானப்படை தளத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி காலை 9.30 மணிக்கு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய பிரதமர் மோடி நாடு பல உயரங்களையும் தொட்டு அதனையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது . ஏரோ இந்தியா நிகழ்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என்று கூறினார்.
இதையடுத்து நிகழ்ச்சி முடிந்து நேற்றிரவு பிரதமர் மோடி உடனே டெல்லி திரும்பாமல், கர்நாடக ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். இதற்கிடையில், நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை கன்னட திரையுலக நட்சத்திரங்களான கேஜிஎப் படத்தின் நாயகன் நடிகர் யாஷ், காந்தாரா படத்தின் இயக்குநர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டி, மறைந்த கன்னட லிட்டில் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது அவர்களிடம் பேசிய மோடி கன்னட சினிமா குறித்தும் கன்னட திரையுலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் கேட்டறிந்ததாகவும், தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் தங்கள் பணியின் மூலம் நாட்டின் கலாச்சாரம், அடையாளம் ஆகியவற்றிற்கு ஊக்கம் அளித்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டியாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடியுடனான இவர்களின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
- பி. ஜேம்ஸ் லிசா










