“பத்தாண்டுகள் ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு அமல்படுத்தாது” – பிரியங்கா காந்தி பேச்சு

“இன்னும் பத்தாண்டுகள் ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு அமல்படுத்தாது” என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கூறியுள்ளார். 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர்…

“இன்னும் பத்தாண்டுகள் ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு அமல்படுத்தாது” என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 17-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

தேர்தலையொட்டி, மத்தியப் பிரதேசம் தாமோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:

“கடந்த 18 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு மக்களை தொடர்ந்து ஏழைகளாகவே வைத்திருக்கிறது. மக்களுக்கு விலைவாசி உயர்வில் இருந்து நிவாரணம் வேண்டும். அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் கூட இல்லாமல் இந்த மாநில மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மத்தியப் பிரதேச பாஜக அரசு தனது ஆட்சியின் 225 மாதங்களில் 250 முறைகேடுகளை செய்து, சாதனை படைத்துள்ளது. பெண்கள், தலித்துகள், பழங்குடிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் பாஜக அநீதி இழைத்துள்ளது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி பேசும்போதெல்லாம் பாஜகவினர் அமைதியாகி விடுகிறார்கள். ஓபிசி மக்களுக்கான உரிமைகளை கொடுக்காமல் பாஜகவால் இனிமேலும் ஏமாற்ற முடியாது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினோம் என்று பாஜகவினர் கூறிக்கொள்கின்றனர். ஆனால் இந்த இட ஒதுக்கீடு இந்த தேர்தலில் அமலாகாது. இன்னும் பத்தாண்டுகள் ஆனாலும் கூட பாஜக இந்த இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வராது என்பதுதான் உண்மை” இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.