பாஜக நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை: கொலையின் பின்னணி என்ன…? 9 பேர் சரணடைந்தது எப்படி..?

பிரபல ரவுடியும், பாஜக நிர்வாகியுமான பிபிஜிடி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.. கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, அவரை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை வழக்கு…

பிரபல ரவுடியும், பாஜக நிர்வாகியுமான பிபிஜிடி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.. கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, அவரை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 9 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் எங்கு நடந்தது..? கொலையின் பின்னணி என்ன…? செய்தித் தொகுப்பில் காணலாம்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜிடி சங்கர். இவர் வளர்புறம் ஊராட்சிமன்ற தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். 2020 ஆம் ஆண்டு தன்னை பாஜக-வில் இணைத்துக் கொண்ட இவருக்கு, கட்சி எஸ்சி/எஸ்டி பிரிவு மாநில பொருளாளர் பதவி வழங்கியது. பிரபல ரவுடியாக வலம் வந்த பிபிஜிடி சங்கர் மீது 5 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஏ+ கேட்டகரி ரவுடியான பிபிஜிடி சங்கர் இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை சார்பிலும் பிபிஜிடி சங்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு போடப்பட்டு நிலுவையில் உள்ளது.

ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபட்டு வந்த பிபிஜிடி சங்கர், பலரது நிலங்களையும் அபகரித்து முறைகேடாக சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கிக் குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு, இவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. சோதனையின் முடிவில் பிபிஜிடி சங்கரிடம் இருந்து உரிய ஆவணங்களும், முகாந்திரமும் இல்லாத 25 கோடி ரூபாய் மதிப்புடைய 79 சொத்துக்கள் அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு சிட் பண்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் பிபிஜிடி சங்கர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அவரை கைது செய்தனர்.

பின் ஜாமினில் வெளியே வந்த அவர், மீண்டும் பல கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஏப்ரல் 27 ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பிய சங்கரை, நசரத்பேட்டை அருகே வழிமறித்த கும்பல் அவரது கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில் கார் நிலைகுலைந்து சிறுது தூரம் சென்று நின்றது. காரில் இருந்து இறங்கி ஓட முயன்ற சங்கரை சுற்றிவளைத்த கும்பல், அவரை அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சம்பவ இடம் வந்த நசரத்பேட்டை போலீசார் கொலை செய்யப்பட்ட சங்கரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள நசரத்பேட்டை போலீசார், பிபிஜிடி சங்கரை கொலை செய்த கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக நிர்வாகியான பிபிஜிடி சங்கர் கொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அத்துடன் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் மாநிலம் தழுவிய போராட்டத்தை தமிழக பாஜக கையிலெடுக்கும் எனவும் எச்சரித்துள்ளார். பிபிஜிடி சங்கரின் உறவினரான பிபிஜி குமரன் சாராய வியாபாரியாக இருந்து பின் தொழிலதிபர் போர்வையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். 2012 ஆம் ஆண்டு பிபிஜி குமரனை முன்விரோதம் காரணமாக எதிர்கோஷ்டியினர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். அதே பாணியில் பிபிஜிடி சங்கரும் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.