மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய பி.டி. உஷா!

மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தக் கூடாது, அவர்கள் செய்தது விளையாட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல என இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா கூறிய கருத்து பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள்…

மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தக் கூடாது, அவர்கள் செய்தது விளையாட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல என இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா கூறிய கருத்து பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், இவர்களின் இந்த போராட்டம் குறித்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் 100 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற புகழ்பெற்ற தடகள வீராங்கனையாக திகழ்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவராக இருக்கும்  பி.டி. உஷா கூறிய கருத்துக்கு பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை கடுமையாக சாடிய பி.டி.உஷா, இந்த போராட்டம் “விளையாட்டுக்கும் நாட்டிற்கும் நல்லதல்ல” என்றும், மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவின் அறிக்கை வெளிவரும் வரை காத்திருக்குமாறு கூறினார். அத்துடன் வீரர்களின் போராட்டம் “ஒழுக்கமின்மைக்கு சமம்” என்று அவர் கூறினார்.

“வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தியிருக்கக் கூடாது. அவர்கள் குறைந்தபட்சம் குழுவின் அறிக்கைக்காக காத்திருந்திருக்க வேண்டும். அவர்கள் செய்தது விளையாட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. இது ஒரு எதிர்மறையான அணுகுமுறை,” என்றும், “பாலியல் துன்புறுத்தல் புகார்களுக்கு, IOA குழு மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆணையம் உள்ளது. தெருவுக்குச் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் எங்களிடம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் IOA க்கு வரவே இல்லை.

மேலும், அவர்கள் தர்ணாவில் அமர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளையும் தங்களுடன் சேருமாறு கேட்டுக்கொள்கிறார்கள், அதுவே எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று உஷா விளையாட்டு அமைப்பின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

உஷாவின் விமர்சனத்திற்குப் பதிலளித்த  மல்யுத்த வீரர்கள், “பி.டி. உஷாவின் கருத்து எங்களை புண்படுத்துகிறது. அவள் ஒரு பெண்ணாக இருந்தும் எங்களை ஆதரிக்கவில்லை. என்ன ஒழுங்கீனம் செய்தோம்? நாங்கள் இங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைத்திருந்தால் இதை செய்திருக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக வீதியில் வந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவராக இருக்கும்  பி.டி. உஷா கூறிய கருத்து பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பிரபல வீரர்கள் கபில் தேவ் மற்றும் நீரஜ் சோப்ரா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.