அமர் பிரசாத் ரெட்டி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதை தடுக்கக் கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு!

தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்ட மாநில பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்கக் கோரி, அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். செங்கல்பட்டு…

தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்ட மாநில பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்கக் கோரி, அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் உள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட இருந்த கொடி கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும்,  கனரக இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தாகவும் மாநில பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத் ரெட்டி மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த விவகாரத்தில் அவரை அக்டோபர் 21-ஆம் தேதி கானத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, சென்னையில் பதிவாகி இருந்த மேலும் இரண்டு வழக்குகளிலும் அமர்
பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.  இந்த நிலையில் தனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தடை விதிக்கக் கோரி அவரது மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,  கனரக இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்தில் தனது
கணவர் இல்லாத நிலையில்,  பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு,  கைதாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் ஆளும் கட்சியான திமுக-வின் சமூகவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதால்,  தனது கணவர் மீது பொய் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும்,  போலி பாஸ்போர்ட் வழங்கிய விவாகரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி
டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியதால்,  அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் சொல்லி பொய் வழக்கு பதிவு செய்து தனது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையருக்கு மனு அளித்தும் மனு குறித்து
பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.  இதனால் தனது கணவர் அமர் பிரசாத்
ரெட்டியை,  குண்டர் சட்டத்தில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.