நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகள், பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம் 2024-ன் கீழ் விசாரிக்கப்படுகின்றன. இதில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதா வரையறுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து உடனே விவாதகிக்க இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுப்பட்டனர். இதைத்தொடர்ந்து இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மீண்டும் இரு அவைகளும் கூடியது.
அப்போது அரசுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா- 2026 இன்று கடும் அமளிக்கு இடையே மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மசோதவை தாக்கல் செய்தார். இந்த சட்டத் திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ. 50 லட்சம் வரை அபராதமும், முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.




