23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்க புரத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளி பதக்கம் வென்றதை தொடர்ந்து அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “CWG2026-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு என் பாராட்டுகள்.
தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றி ஊக்கமளிக்கட்டும்! கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




