சப்பாத்தி செய்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ்க்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, 2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்க, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையை வலியுறுத்தியது. இதற்கு 70க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 2023ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, அனைத்து எம்.பி.க்களுக்கும் தினையை அடிப்படையாகக் கொண்ட மதிய உணவை அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த மதிய உணவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், தான் இந்திய உணவு வகைகளுள் ஒன்றான சப்பாத்தி சமைப்பது போன்ற வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், செஃப் ஒருவருடன் இணைந்து, சப்பாத்தியை பில் கேட்ஸ் சமைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ”சூப்பர்! இந்தியாவின் ஆரோக்கியமான உணவு தானியங்களுள், தினை மிகப் பிரபலமான ஒன்று. தினையால் செய்யக்கூடிய இன்னும் பல உணவு வகைகள் உள்ளன. அவற்றையும் நீங்கள் செய்து பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.







