பீகாரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 5 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கோவின் தளத்தில் பதிவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி, உரிய மருத்துவ நிபுணத்துவத்தை கொண்டு இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோய் தொற்றுக்கு எதிராக கூடுதல் எதிர்ப்புசக்த்தியை உண்டுசெய்ய பூஸ்டர் டோஸ்களும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஜனவரி 3ஆம் தேதி முதல் 15-18 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
தற்போது பீகாரைச் சேர்ந்த விபா குமாரி சிங் என்ற மருத்துவர் ஒருவர் 5 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் அறுவை சிகிச்சைகளை செய்யும் மருத்துவர் ஆவார். இவர் 5 முறை தடுப்பூசி செலுத்திகொண்டதாக அரசு ஆவண பதிவுகளை ஆய்வு செய்த போது தெரியவந்துள்ளது.
அரசு ஆவணங்கள் படி, கடந்த ஆண்டு ஜனவரி 28-ல் முதல் தவணையும், அதே ஆண்டில் மார்ச் மாதத்தில் இரண்டாம் தவணையும் செலுத்தியுள்ளதாக பதிவாகியுள்ளது. மேலும், பிப்ரவரி 6-ல் பான் கார்டை கொண்டு 3ஆம் முறையும், ஜூன் 4-ல் 4வது முறையும், இந்த மாதத்தில் 5வது முறையும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக தரவுகளில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அவரிடம் விசாரனை நடத்தப்பட்டது. அப்போது 2 தவணையை அடுத்து தற்போது அரசு அனுமதித்துள்ள பூஸ்டர் தடுப்பூசியுடன் சேர்த்து 3 முறை தடுப்பூசி மட்டுமே செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது பான் கார்ட் தகவல்கள் கொண்டு வேறு யாரோ தடுப்பூசி செலுத்தியதாகவும், அது குறித்து விசாரணை நடத்தவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து, பாட்னா மாவட்ட நீதிபதி விசாரணையை நடத்தி வருகிறார்.
இதேபோல், பீகாரை சேர்ந்த 84 வயது முதியவர் 12வது முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தப்போது பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.








