விருதுநகர் அருகே இளம்பெண்ணை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் தன்னுடன் கல்லூரியில் படித்த பாட்டக்குளத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இளம்பெண் வேலைக்கு செல்வதை விரும்பாத பிரகாஷ் வேலைக்கு செல்லக் கூடாது எனக் கூறி அவரது வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் பிரகாஷ் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இது குறித்து விசாரிப்பதற்காக, பிரகாஷை போலீசார் விசாரணைக்கு வரச் சொல்லி உள்ளனர். விசாரணைக்காக வந்த பிரகாஷ் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியைக் குத்தி உள்ளார். காவல் நிலையத்திலேயே நடந்த கத்திக்குத்து சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிரகாஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காயமடைந்த இளம்பெண் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.








