”திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெற பண்டாரங்களே தகுதியானவர்கள்” – நீதிமன்றம்

திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோயிலில் பூஜைகள் செய்வதற்கான கட்டணம் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் சார்பாக இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பூஜைக்கு…

திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

பழனி முருகன் கோயிலில் பூஜைகள் செய்வதற்கான கட்டணம் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் சார்பாக இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பூஜைக்கு 9 ரூபாய் 40 பைசா என நிர்ணயம் செய்யபட்டுள்ளது. இதில் கோயில் பங்காக 6 ரூபாய் 40 பைசாவும், திருமஞ்சனம் நீருக்கு 75 பைசாவும், சிரம தட்சணைக்கு 1 ரூபாயும், சொர்ண புஷ்பத்திற்கு 1 ரூபாயும், அத்தியான பட்டருக்கு 25 பைசாவும் என பிரித்து பங்கிட்டு கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் திருமஞ்சனம் செய்வதற்கான தொகையில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என அர்ச்சகர் தரப்பினர் பழனி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணை செய்யப்பட்டு அர்ச்சகரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, பழனி முருகன் கோவில் அர்ச்சகர் சங்கம் சார்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ”பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் திருமஞ்சனம் பூஜை செய்வதற்கான தொகையில் தங்களுக்கும் பங்கு வேண்டுமென குருக்கள் அர்ச்சகர் தரப்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். தற்போது பூஜைக்கான 75 பைசா தொகையைப் பெற அர்ச்சகர்கள் தகுதியுடையவர்களா? அல்லது பண்டாரங்கள் தகுதியுடையவர்களா? இல்லை இருவருக்கும் பங்கீடு செய்வதா? என முடிவு செய்ய வேண்டிவுள்ளது” என்று கூறினார்.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள், தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு ஆவணங்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பாக தாக்கல் செய்த ஆவணங்களைப் பார்க்கும்போது ஆரம்ப காலம் முதலே பண்டாரங்கள் தான் திருமஞ்சன நீரை தொன்று தொட்டு எடுத்து வருகிறார்கள், குருக்களுக்கு அதில் உரிமை வழங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் இந்த உரிமை பண்டாரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குருக்கள் திருமஞ்சன சேவை நீரை எடுத்து வருவதாக எங்கும் குறிப்பிடவில்லை.

பண்டாரம் சமூகத்தை சேர்ந்தவர்களே திருமஞ்சனத்திற்கான புனித நீரை அர்த்தமண்டபம் வரை சுமந்து வருகிறார்கள். எனவே திருக்கோவில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள தொகையை பெற்றுக்கொள்ள பண்டாரம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே தகுதியானவர்கள் என குறிப்பிட்டு, கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த நீதிபதி, அர்ச்சகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து, 10 ஆண்டுகளாக நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.