முக்கியச் செய்திகள் தமிழகம்

இலவச வேட்டி-சேலை திட்டத்திற்கு நிலுவை தொகை? வானதி சீனிவாசன்

இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.158 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பா.ஜ.க. கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 1983 முதல் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, ஏழைகள், முதியோர், விதவை, ஆதரவற்றோர் என சுமார் 1 கோடியே 80 லட்சம் பேருக்கு வேட்டியும், சுமார் 1 கோடியே 80 லட்சம் பேருக்கு சேலையும் வழங்கப்பட்டு வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி-சேலைகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு இலவச வேட்டி சேலை உற்பதிக்கான ஆர்டர்கள் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படாதது குறித்து பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் கேள்வி எழுப்பியிருந்தன.

அதனைத் தொடர்ந்து, இலவச வேட்டி சேலை திட்டம் தொடரும் என்றும் அதற்காக 2022-2023ம் ஆண்டு 487 கோடியே 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை இலவச வேட்டி சேலைகளுக்கான ஆர்டர்கள் வழங்கப்படவில்லை. பள்ளிச் சீருடைகள், இலவச வேட்டி சேலை போன்ற அரசின் திட்டங்களை நம்பியே நெசவாளர்கள் உள்ளனர். எனவே, இலவச வேட்டி சேலைக்கான ஆர்டர்களை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். ஏற்கனவே இரண்டு மாதங்கள் தாமதம் ஆகிவிட்ட நிலையில் மேலும் தமிழக அரசு தாமதிக்கக் கூடாது.

இலவச வேட்டி சேலை திட்டத்தின் மூலம் 2,664 கைத்தறி நெசவாளர்கள், 11,124 பெடல் தறி நெசவாளர்கள், 41 ஆயிரத்து, 983 விசைத்தறி நெசவாளர்கள் பயன் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்து கொடுத்த நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, 2021-ம் ஆண்டு வரை தமிழக அரசு 158 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளதாக வரும் செய்திகள் வேதனை அளிக்கின்றன.

158 கோடி ரூபாய் நிலுவைத் தொகையில், 72 கோடி ரூபாய், ஆறு கூட்டுறவு நுாற்பாலைகளுக்கும், மீதமுள்ள தொகை நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும் வழங்க வேண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. பணியாளர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாமல் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நிலுவைத் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வதால், கடந்த10 ஆண்டுகளாக, நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு போனஸ் கூட வழங்க முடியவில்லை.

ஏற்கனவே நலிந்த நிலையில் இருக்கும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், அரசு வழங்க வேண்டிய தொகையை வழங்காததால் மேலும், நெருக்கடியை சந்தித்து வருகின்றன. எனவே நெசவாளர் விவகாரத்தில் அரசியல் செய்யாமல், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய 158 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பொது மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியமில்லை: மத்திய அரசு

Halley Karthik

சென்னை மெட்ரோ ரயில் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Halley Karthik

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட மாணவர் வெட்டி கொலை

G SaravanaKumar