மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகம ஆசிரியர்களின் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அரசாணை வெளியிட்டார். கடந்த 2007 ஆண்டு மதுரை உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் சிவாச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக 2008 ஆம் ஆண்டு இந்தப் பயிற்சி பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு மீண்டும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியைத் திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான அர்ச்சகர் பயிற்சி பள்ளி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்றுவிப்பதற்கு ஆகம ஆசிரியர்களை நியமிக்க கோவில் நிர்வாகம் விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.
உரிய பயிற்சி பெற்ற அனுபவமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 18 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2007ஆம் ஆண்டு இந்த அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்ற பிராமணர் இல்லா அர்ச்சகர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு பணி வழங்கியது குறிப்பிடத்தக்கது.








