டெல்லி மதுபான உரிமம் முறைகேடு விவகாரத்தில் தம்மை தொடர்புபடுத்தி பேசிய பாஜக மூத்த தலைவர்கள் பர்வேஷ் சர்மா, மன்ஜீந்தர் சிர்சா ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மகள் கவிதா கூறியுள்ளார்.
கடந்த மாதம் ரத்து செய்யப்பட்ட ஆம் ஆத்மி அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மதுபான மாஃபியாவைச் சேர்ந்த பலரை மணிஷ் சிசோடியாவிடம் தெலங்கானா முதலமைச்சரின் மகள் கே.கவிதா அழைத்துச் சென்றார் என்று பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா குற்றம்சாட்டினார்.
அவரது குற்றச்சாட்டுக்கு கவிதா பதிலடி கொடுத்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
என் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும். எனக்கும் அதற்கு எந்த சம்பந்தமும் இல்லை. பாஜகவிடம் அனைத்து விசாரணை அமைப்புகளும் உள்ளன. தேவைப்பட்டால் எந்த விசாரணையை வேண்டுமானால் அவர்கள் நடத்திக் கொள்ளட்டும். நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் காரணமாகவே முதலமைச்சரின் குடும்பத்தினரின் நற்பெயரை கெடுப்பதற்காக பாஜக அரசு இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது.

எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக மூத்த தலைவர்கள் பர்வேஷ் சர்மா, மன்ஜீந்தர் சிர்சா ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்வேன் என்றார் கவிதா.
முன்னதாக, பாஜக மூத்த தலைவர்கள் பர்வேஷ் வர்மா, மஞ்சீந்தர் சிங் சிர்ஸா ஆகியோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, தெலங்கானா சட்டமேலவை உறுப்பினரான கவிதா, டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சந்திக்க மது மாஃபியாவை அழைத்து வந்தார். அவர், இடைத்தரகராக செயல்பட்டார்” என்று குற்றம்சாட்டினார்.