இந்து மதத்தில் உள்ள பக்தி மார்க்கமே நாடு இணைந்திருப்பதற்கு காரணம் என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துளளார்.
ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின்னர் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர்.
இதனையடுத்து, கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காசியில் இருப்பவர்கள் ஏழுமலையானை வழிபட திருப்பதிக்கு வருகின்றனர். அதேபோல் அவர்கள் ராமேஸ்வரமும் செல்கின்றனர். நாட்டின் தென்புலத்தில் பிறந்தவர்கள் சாமி கும்பிடுவதற்காக காசிக்கு செல்கின்றனர். இந்து மதத்தில் உள்ள இந்த மகத்தான பக்தி மார்க்கம் காரணமாகவே நாடு இணைந்து உள்ளது.
எனவே இந்த நாட்டை யாராலும் எப்போதும் பிரிக்க இயலாது. இன்று குடும்பத்துடன் திருப்பதி மலைக்கு வந்த நான் நாடு சுபிட்சம் அடைய வேண்டும். நல்ல மழை பெய்ய வேண்டும். ஏழைகள் பசியாற வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் சக்தியை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டதாக கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா









