திமுக போடும் பொய் வழக்குகளை கண்டு பயப்பட மாட்டேன் என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தான் அரசுப் பள்ளி மாணவன் என குறிப்பிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சேலம் மண் ராசியான மண் என கூறினார். அண்ணா பிறந்த நாள் கொண்டா தகுதியுள்ள கட்சி அதிமுக கட்சி என்ற அவர், பெயரில் அண்ணா, கொடியில் அண்ணா என அண்ணாவிற்கு பெருமை சேர்த்த கட்சி அதிமுக தான் என்றார்.
அதிமுக ஆட்சியில் எண்ணற்ற பிரச்சனைகளை உருவாக்கினார்கள். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினார்கள். அனைத்து போராட்டத்திற்கும் அனுமதி கொடுத்து அதனை சமாளித்தோம். ஆனால் இன்றைய முதலமைச்சர் எதையும் சமாளிக்க முடியவில்லை என சாடினார். அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என மு.க.ஸ்டாலின் பேசி வருவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என்றார்.
அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மடிக்கணினிகள் தற்போது வழங்கப்படவில்லை. அறிவுபூர்வமான கல்வி கொடுத்து வரலாறு படைத்தது அதிமுக ஆட்சி. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டத்தை ரத்து செய்தவர்களை இளைஞர் சமூகமும், காலமும் மன்னிக்காது என கூறினார். அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். அவருக்கு சிலர் துணை போகின்றனர். கருப்பு ஆடு யார் என்பது உங்களுக்கு தெரியும்.
அதிமுகவில் பொய் வழக்கு போடுவதை கண்டு எடப்பாடி பழனிச்சாமி பயந்தவரா என கேள்வி எழுப்பிய அவர், தான் அரசு பள்ளியில் படித்த மாணவன் எதற்கும் பயப்பட மாட்டேன் என்றார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அடியோடு சட்டம் ஒழுங்கு அழிந்து விட்டது. நாட்டின் வளர்ச்சி சட்டம் ஒழுங்கை பொறுத்து தான் உள்ளது. ஆனால், கஞ்சா விற்பனை செய்யாத இடமே கிடையாது. போதை பொருளை தடுக்க வேண்டிய அரசே வேடிக்கை பார்க்கிறது மேலும் சட்டவிரோத செயல்களில் திமுகவினரை ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மின்கட்டண உயர்வால் ஜவுளி தொழில் நசுங்கும் ஆபத்து உள்ளது. சொத்துவரி உயர்வு போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்றும் திமுக-வின் பகல் கனவு இனி பலிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
-இரா.நம்பிராஜன்









