பள்ளிக் கல்வித் துறையில் அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை திமுக அரசு புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
போளூர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட போளூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சி மக்களுக்கு அதிக நன்மைகள் செய்துள்ளது. அதிமுக அரசு கடந்த ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்ட, அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் தான் திமுக அரசு இப்போது நிறைவேற்றி வருகிறது.
குடிமராமத்து என்ற பெயரில் ஏரி, குளம் குட்டைகளை எல்லாம் அதிமுக அரசு தூர்வாரியது. அதன் காரணமாக தற்பொழுது பொழிகின்ற மழை ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் அனைத்தும் ஏரி, குளம், குட்டைகளில் தேங்கி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தற்போது விவசாயத்துக்குப் பயன்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையில் அதிமுக அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால், திமுக அரசு அத்தனை திட்டங்களையும் முடக்கி புறக்கணித்துள்ளது. குறிப்பாக மடிக்கணினி திட்டம் என்றார்.
-ம.பவித்ரா







