தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தியதாக ரூபாய் 36 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தப்படுவதை நிறுத்தாவிட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிளாஸ்டிக் ஒழிப்பை வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டுமெனத் தெரிவித்த நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.








