உலக வன தினத்தையொட்டி தனுஷ்கோடியில் ஆமைக்குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து 150 ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி பகுதியில் எம்.ஆர்.சத்திரம்,கோரி, கம்பிப்பாடு உள்ளிட்ட இடங்களில் ஆமைகள் இட்டுச் சென்ற 15,500 ஆமை முட்டைகள் வனத்துறையின் மூலம் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடல் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதில் 52 நாட்களுக்குப்பின் நேற்று மாலை தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம் பொறிப்பகத்தில் முட்டையிலிருந்து 150 ஆமை குஞ்சுகள் வெளி வந்தது. நேற்று உலக வன தினத்தையொட்டி மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக வனத்துறை அதிகாரிகள், மாவட்ட சூடுதல் ஆட்சியர் மாணவ, மாணவியர் முன்னிலையில், தனுஷ்கோடி தெற்கு கடல் பகுதியில் ஆமைக்குஞ்சுகள் பாதுகாப்பாக விடப்பட்டன.
மேலும் இதுநாள் வரை ஆமைகளைப் புத்தகத்தில் மட்டும் பார்த்து வந்த தங்களுக்கு, ஆமைக்குஞ்சுகளை நேரடியாக பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.







