மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

கொரோனா காலங்களில் பணியாற்றிய மயான பணியாளர்களை முன் களப்பணியாளர்களாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்காவல் படை பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள்,…

கொரோனா காலங்களில் பணியாற்றிய மயான பணியாளர்களை முன் களப்பணியாளர்களாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மத்திய மாநில அரசுகளின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்காவல் படை பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் தன்னார்வலர்கள், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோரை முன்கள பணியாளர்களாகத் தமிழ்நாடு அரசு முன்னதாக அறிவித்திருந்தது. மேலும் அந்த வரிசையில், முக்கிய தொழிற்சாலைகள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி இலவசமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது.

அதனடிப்படையில் கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வரும் மயான பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு சிறப்பித்துள்ளது.

குறிப்பாக மத்திய அரசின் ஆணைப்படி, மயானப் பணியாளர்கள் மத்திய அரசின் முன்களப் பணியாளர்களின் பட்டியலில் இல்லாவிடினும் 18 வயதிற்கு மேல் உடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும்போது முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும், கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்து வரும் மயானப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.