பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை முதற்கட்டமாக கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்தது. மேலும், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை அமல்படுத்துவது என்றால் உற்பத்தி நிலையிலேயே தடுப்பதுடன், பிற மாநிலங்களிலிருந்து வருவதையும் தடுக்க வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை அமல்படுத்தப்பட்டுள்ளபோது, தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்துவதும் சாத்தியம் என தெரிவித்த நீதிபதிகள், குறிப்பிட்ட ஒரு பகுதியில், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர்.
அதன்படி முதல்கட்டமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சென்னை கொளத்தூர் தொகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பான அறிக்கையை மூன்று வாரங்கள் கழித்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








