“மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டி!” – மாயாவதி அறிவிப்பு

2024 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார்.  பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி,  அவரது பிறந்தநாளை (ஜன.15) முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.…

2024 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். 

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி,  அவரது பிறந்தநாளை (ஜன.15) முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் வறுமையைப் போக்குவதற்கு பதிலாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை அடிமைகளாக வைத்திருக்க முயற்சிக்கின்றன.

எங்களது அனுபவத்தில் கூட்டணிகள் எப்போதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை. கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம்.  இந்த காரணத்தினால் நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன.  தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம்.  வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்.  வாய்ப்பிருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும்.” என்று தெரிவித்தார்.

2024 மக்களவைத் தோ்தலை எதிர்கொள்வதற்கு பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.  இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் இதுவரை 4 முறை நேரில் சந்தித்து ஆலோசித்துள்ளனர்.  இந்த கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாயாவதி இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.