ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து காதலர்கள் செயினை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீயணைப்புத் துறை அருகே உள்ள சுடுகாட்டில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் காளியம்மாள் (65) என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, 20 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் இருவர் அங்கு வந்துள்ளனர். பெண் வாகனத்தை ஓட்ட இளைஞர் வாகனத்தின் பின் அமர்ந்து வந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் காளியம்மாளிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து அவரது கழுத்தில் இருந்த சுமார் 5 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசராணை மேற்கொண்டு வந்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமால் மேற்பார்வையில், தனிப்படை அமைத்து இக்குற்றச் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வந்ததன.
இந்நிலையில், சோமையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அனந்தநாராயணன் மகன் பிரசாந்த் (20), சுங்கம் பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவரின் மகள் தேஜஸ்வினி (20) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பிரசாந்த் பி.டெக் ஐடி படித்து வருகிறார். கடந்த 3 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். செலுவுக்கு அடிக்கடி பணம் தேவைப்பட்டதாலும், பிரசாந்த் Betting App மூலம் பணத்தை இழந்ததால் கடன் தொல்லை ஏற்பட்டதையடுத்து கடனை சரிகட்டவும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படையினர் பிரசாந்த், தேஜஸ்வினி இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 5 1/2 பவுன் நகையைப் பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காதலர்கள் இருவர் செயினை பறித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









