அவிநாசி – அத்திக்கடவு திட்டம்: கருப்பு முகக்கவசம் அணிந்து போராடிய பாஜகவினர்

அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து ஈரோட்டில் பாஜக-வினர் கருப்பு முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்ட…

அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து ஈரோட்டில் பாஜக-வினர் கருப்பு முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அவினாசி – அத்திக்கடவு திட்டம், ஆயிரத்து 856 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தியும், திமுக அரசைக் கண்டித்தும் பாஜக விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமையில் அக்கட்சியினர் சித்தோடு அருகே கருப்பு முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவல் அறிந்து சென்ற அமைச்சர் முத்துசாமி, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.இதையடுத்து பேசிய பாஜக விவசாய அணி தலைவர் நாகராஜ், அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் மட்டுமே கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி, இந்தத் திட்டத்தை திமுக அரசு காலதாமதம் செய்யவில்லை எனவும், நிலம் கொடுத்த விவசாயிகளிடம் அரசு பேசி வருவதாகவும் கூறினார். மேலும், விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.