தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து கடந்த 20-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதனிடையே பளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி சந்தித்து பேசினார். இந்தநிலையில் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சிறையில் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “சர்வாதிகார சோஃபா மாடல் அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம். சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி – மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம்.
அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம். மிசா – எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள். விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.




