உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் பேரணியில் கார் மோதிய விபத்தில் உள்ளூர் பாஜக தலைவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தரப் பிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.
இதற்கிடையில், லகிம்பூர் கேரி பகுதியில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமமான பன்வீர்பூரில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர். அப்போது அந்த வழியாக பா.ஜ.கவினரின் வாகன அணி வகுப்பில் ஒரு கார் விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டுமென்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்து நேற்று நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தற்போது விவசாயிகள் பேரணியில் கார் மோதிய விபத்தில் உள்ளூர் பாஜக தலைவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூர் பாஜக தலைவர் சுமித் ஜெய்ஸ்வால், சிசுபால், நந்தன் சிங் பிஷ்ட் மற்றும் சத்ய பிரகாஷ் திரிபாதி ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்களில் சத்ய பிரகாஷ் திரிபாதியிடமிருந்து உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி மற்றும் மூன்று குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக உ.பி காவல்துறை தெரிவித்துள்ளது.
விவசாயிகள் பேரணியில் கார் மோதிய விபத்தில் காரிலிருந்து சுமித் ஜெய்ஸ்வால் இறங்கி தப்பிக்கும் காட்சி கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








