ஆத்தூர்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை-இளைஞர் கைது

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு சோளக்காட்டில் பதுங்கியிருந்த இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை…

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு சோளக்காட்டில் பதுங்கியிருந்த இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை
சேர்ந்த மாற்றுத்திறனாளியான விவசாயி முருகேசன் இவருக்கு ஜெயலட்சுமி என்கிற
மனைவியும் நந்தினி, ரோஜா என்கிற இரண்டு மகள்களும் விஜய் என்கிற ஒரு மகனும்
உள்ளனர். இந்நிலையில் முருகேசன் கூடமலையில் இருந்து கடம்பூர் செல்லும்
சாலையில் உள்ள சின்னசாமி என்பவருடைய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து
குடும்பத்துடன் தோட்டத்திலேயே தங்கி விவசாயம் செய்து வருகிறார். முருகேசனின்
இரண்டாவது மகள் ரோஜா ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி,ஏ, தமிழ்
இரண்டாம் ஆண்டு [ ஆசிரியர் பயிற்சி ] படித்து வருகிறார். ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த நீலக்கிருஷ்ணன் மகன் சாமிதுரை கூடமலையில் உள்ள தனது பெரியப்பா சின்னதுரையின் வீட்டிற்கு சென்றபோது கல்லூரி மாணவி ரோஜாவை பார்த்திருக்கிறார்.

அப்போது மாணவியை ஒரு தலைபட்சமாக இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். அடிக்கடி மாணவியின் ஊருக்குச் சென்ற சாமிதுரை பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் போது மாணவியை காதலிக்க வலியுறுத்தி கட்டாயப்படுத்தி வந்தார். விவசாயி முருகேசனின் மூத்த மகள் நந்தினியின் திருமணம் வருகிற 13ம் தேதி
நடைபெற இருந்த நிலையில் முருகேசன் அவரது மனைவி இருவரும் திருமண அழைப்பிதழ் வழங்க உறவினர் வீட்டிற்கு வெளியூர் சென்றனர். இதையறிந்த சாமிதுரை தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 8ம் தேதி ரோஜாவின்
வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் இல்லையென்றால் உன்னை
கொன்று விடுவேன் எனவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ரோஜா மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சாமிதுரை மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை ரோஜா மீதும் அவரது அக்கா நந்தினி மீதும் ஊற்றியிருக்கிறார். பின்னர் இருவரும் சுதாரித்து கொண்ட நிலையில் ரோஜாவை கீழே தள்ளிய சாமிதுரை தனது நண்பர்கள் உதவியுடன் ரோஜாவின் கழுத்தில் காலை வைத்து மிதித்து தலையில் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார் என்றும் அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கு; தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு!

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று
ரோஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில், கூடமலை அருகே சோளக்காட்டில் பதுங்கியிருந்த கொலையாளி சாமிதுரையை அப்பகுதி பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கெங்கவல்லி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.