திமுக அரசு குடும்பத்தை பற்றி நினைக்கிறதே தவிர மக்களை பற்றி கவலைப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திருவெண்காடு, திருக்கடையூர் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று காலை தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோ பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக உள்ள கோயில் வழிமுறைகளில் அரசு தலையிடக் கூடாது. தமிழக அரசு ஆதினம் விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது, இது கண்டிக்கத்தக்கது. பட்டினப் பிரவேசம் 500 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதனை வேண்டும் என்றே திமுக அரசு தடை செய்தது” என்று குற்றம் சாட்டினார்.
பட்டினப் பிரவேசத்திற்கு வருங்காலங்களில் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று திமுக அரசு கூறியுள்ளதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “ஆட்சி இருந்தால் பார்ப்போம்” என பதிலளித்தார். கடவுள் யார் தவறு செய்தாலும் தக்க தண்டனை கொடுப்பார் எனவும் கூறினார்.
திமுக அரசு தனது குடும்பம் செழிக்க வேண்டும் என்றும் எந்தெந்த முறைகளில் பணம் சம்பாதிக்கலாம் என்றும் சிந்திக்கின்றதே தவிர இந்த ஓராண்டு ஆட்சிக் காலத்தில் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, சசிகலா அதிமுகவில் இல்லை. சசிகலா மற்றும் டிடிவி தினகரன் குறித்து தயவு செய்து கேள்வி எழுப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.







