நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை தொடர்பாக ஓபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை இன்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை உயர்நீதிமன்ற உத்தரவின்…

முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக நொச்சிக்குப்பம் மீனவர்களின் பிரச்னை இன்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை உயர்நீதிமன்ற உத்தரவின் படி அகற்றும் பணியில் சென்னை மாநாகராட்சி ஈடுபட்டு வருவது தொடர்பாகவும், அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவது தொடர்பாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

அப்போது பேசிய அவர், பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித் தொழில், படகுகளை நிறுத்தும் இடங்களுக்கு அறிவியல் வரைபடம் தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மீனவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமெனவும் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். இதே தீர்மானத்தின் மீது சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் பேசினர்.

அதற்கு விளக்கமளித்து பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கருதி நீதிபதிகள் தானாக முன்வந்து எடுத்த வழக்கின் காரணமாக கடைகள் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பேசினார். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று வந்த மீனவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர, உரிமைகளை பாதுகாப்பது குறித்து நீதிமன்றத்தில் நிலையில் மூத்ட வழக்கறிஞர்களை வாதாட முதலமைச்சர் ஏற்பாடு செய்ததாகவும் அமைச்சர் விளக்கினார்.

மேலும் மீனவர்கள் வசிக்கும் இடங்களில் இருபுறமும் கடைகள் வைப்பதால் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன் படி வழக்கு விசாரணை ஜூன் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக இன்றுடன் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அமைச்சர் பேரவையில் விளக்கமளித்தார்.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.