கொடைக்கானல் கண்ணாடி மாளிகையில், வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் பூ இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்தது.
திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் குளுமை நிறைந்த சர்வதேச சுற்றுலா
தலமாகும். மேலும், இங்கு குளிர் பிரதேசங்களில் வளரக்கூடிய அபூர்வ வகை
பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இந்நிலையில், கொடைக்கானல் பிரையண்ட்
பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் , கடந்த சில வருடங்களுக்கு முன்பு
20-க்கும் மேற்பட்ட பிரம்ம கமலம் செடிகள் நடவு செய்யப்பட்டன.
இந்த செடிகளில் இருந்து சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை உள்ளிட்ட
வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்கும். இதனையடுத்து, இந்த வருடத்தில்
முதலாக அபூர்வ வகையான பிரம்ம கமலம் பூ இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்க
துவங்கியுள்ளது. மேலும், இந்த பூக்கள் மூன்று நாட்கள் வரை செடியில் வாடாமல்
உள்ளதாகவும், இரவு நேரத்தில் பூவில் இருந்து நறுமணம் வருவதாகவும்
பூங்கா நிர்வாகம் தெரிவிக்கிறது.
மேலும், 3 நாட்களுக்கு பிறகு பிரம்ம கமலம் பூ அதுவாகவே உதிர்ந்து விடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, பிரையண்ட் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகைக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஆர்வத்துடன் இளஞ்சிவப்பு நிற பிரம்ம கமலம் பூக்களை பார்த்து, புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
—-கு.பாலமுருகன்







