சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் மது பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை தியாகராய நகர் பகுதியில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அலுவலகத்தின் வளாகத்திற்குள் 6-க்கும் மேற்பட்ட பீர் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பாக மாம்பலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பாட்டில்கள் மற்றும் கற்களை வீசிச் சென்ற நபர்களை தேடி வந்தனர். மேலும், சிபிஐ அலுவலகத்திற்கு காவல் பாதுகாப்பும் போடப்பட்டது.
இதையும் படியுங்கள் : நவ.9 முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட
செயலாளர் சிவா, மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று அலெக்ஸ் (22), பாரதி (20), அருண்குமார் (38), பார்த்திபன் (21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் 4 பேரும் மதுபோதையில் சிபிஐ கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, தகராறில் ஈடுபட்டதுடன், கற்கள் மற்றும் காலி மதுபாட்டில்களை அலுவலகத்திற்குள் வீசியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.







